மாணவர்கள் எளிமையான யோகப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இது தேர்வுகளை மட்டுமல்ல வாழ்க்கையின் செயல்முறைகளையும் சிரமமின்றி கடந்த செல்ல உதவும் என பிரதமரின் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வான “பரிக்ஷா பே சர்ச்சா”-வில் சத்குரு பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தேர்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வான “பரிக்ஷா பே சர்ச்சா”-வில் சத்குரு அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடிய காணொளி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகங்களின் யூடியுப் பக்கங்களில் இன்று (15/02/2025) ஒளிபரப்பப்பட்டது.
இதில் பேசிய சத்குரு “தேர்வு நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மீது அக்கறை கொண்டு பாரத பிரதமரால் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த அற்புதமான முன்னெடுப்புக்கு எனது பாராட்டுகள். உலகில் வேறெந்த தலைவர்களும் இது போன்ற ஒரு முயற்சியை எடுத்ததில்லை.
கல்வி என்பது தேர்வுகள் பற்றியது மட்டுல்ல. தேர்வுகள் எப்போதுமே நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல தகுதியாக இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட மட்டுமே. ஆனால் கல்வி என்பது இந்த வாழ்க்கையை நீங்கள் அணுக தேவையான அடிப்படைகளை வழங்குவது. நான் இன்னொரு நபரை விட அறிவானவரா என்று எப்போதுமே நினைக்காதீர்கள், அப்படி ஒன்று இல்லை.
இந்தப் பள்ளிக்கூடம், கல்வி, தேர்வு அனைத்துமே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கத்தையும், அனைவரின் மனதையும் பிரகாசிக்க வைக்க கூடிய அற்புதத்தையும் உருவாக்க வேண்டும்.
இன்று பல்வேறு ஆய்வு முடிவுகள், மக்கள் ஷாம்பவி மஹா முத்ரா தியானத்தை பயிற்சி செய்யும் போது மூளையின் அதிகமான பகுதிகள் தூண்டப்படுவதாக தெரிவிக்கின்றன. இவ்வாறு மூளையில் அனைத்து பகுதிகளும் தூண்டப்படுவது கண்டிப்பாக நடைபெற வேண்டும்.
புத்திசாலித்தனம் என்பது பயன்படுவதை பற்றியது அல்ல, புத்திசாலித்தனம் ஆழமான வாழ்க்கை அனுபவத்தை தரக்கூடியது. உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு செய்யாதவர்களை விட சிறந்த முறையில் செயல்பட முடியுமோ, அதே வகையில் மனதிற்கு அதிக அளவு பயிற்சி அளிக்கும் போது அது மிகச் சிறப்பாக செயல்படும்.” என அவர் பேசினார்.![]()
இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். ஸ்மார்ட்போன், சமூக ஊடகங்கள் மற்றும் அதீத சிந்தனையோட்டம் உள்ளிட்ட கவனச்சிதறல்களை எப்படி கையாள்வது என்ற கேள்விக்கு “எப்போதும் நம்மைவிட புத்திசாலியாக இருக்கும் ஒருவரை தான், நாம் ஸ்மார்ட் என்று அழைப்போம். எனவே போனை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். மாறாக எப்படி அது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை போனே தீர்மானிக்கும் என்றால் அதை பயன்படுத்தாதீர்கள்.
அதீத சிந்தனை பற்றி சொல்ல வேண்டுமானால், என்னை பொருத்தவரை யாருமே போதுமான அளவு சிந்திப்பதில்லை. சிந்தனை என்பது விழிப்புணர்வோடு எண்ணங்களை உருவாக்கும் செயல்முறை. மாறாக வயிற்றுப்போக்கு போல மனதில் எழும் எண்ணங்களை சிந்தனை என சொல்ல முடியாது. எனவே இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை உணருங்கள்.![](https://newsclouds.in/images/inner_content/2025/2/1001503718_1739626976.jpg)
நீங்கள் உடல், மனம் என்று சொல்லும் இரண்டுமே சேகரிக்கப்பட்டது. நீங்கள் சேகரித்தவைகளும் நீங்கள் ஒன்றாக முடியாது. உங்களுக்கும் உங்கள் உடல் மற்றும் மனதின் செயல்பாடுகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை கொண்டு வர வேண்டும். இந்த இடைவெளி இருந்தால், அதனை நீங்கள் சரியாக பயன்படுத்த முடியும். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எளிய யோகப் பயிற்சிகளை கொண்டு வந்தால், அது உடலுக்கும் மனதுக்கும் சமநிலையைக் கொண்டு வந்து, தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையின் செயல்முறையையும் சிரமமின்றி கடந்து செல்ல அவர்களுக்கு உதவி செய்யும்” எனக் கூறினார்.
https://www.youtube.com/watch?v=3GD_SrxsAx8&t=1124s
இதன் பின்னர் “நாத யோகா” எனும் எளிமையான யோகப் பயிற்சியை மாணவர்களுக்கு சத்குரு வழங்கினார். மனதின் அற்புதத்தை தினமும் வெறும் 7 நிமிடங்கள் செய்யும் பயிற்சியின் மூலம் அறிய முடியும், இந்தப் பயிற்சிகள் இணையத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
https://isha.sadhguru.org/in/en/practices-for-students