கோவை - பொள்ளாச்சி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டுகோள்

published 1 year ago

கோவை - பொள்ளாச்சி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டுகோள்

கோவை : கோவையிலிருந்து பொள்ளாச்சி இடையே பயணிகளுக்கான ரயிலை, ஏழு நாட்களிலும் இயக்க வேண்டுமென்று, தி.மு.க., எம்.பி., மற்றும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒருமித்த கோரிக்கை மனுவை, ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர்.கோவையின் ரயில் தேவைகளுக்காக, மத்திய அமைச்சர்கள், ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் என பலரையும் சந்தித்து, கொங்கு மண்டல மக்கள் பிரதிநிதிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மனுக்களையும் மலை போல குவிக்கின்றனர்; அவற்றில் 10 சதவீதக் கோரிக்கைகளைக் கூட ரயில்வே நிறைவேற்றவில்லை.கோவையிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்கள் தரும் வருவாய்க்கும், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளுக்கும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது.குறைந்தபட்சம், பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களையாவது, மீண்டும் இயக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாலும், அதையும் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை.கோவையை ரயில்வே துறை, தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதற்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சியினரும் இணைந்து குரல் கொடுத்தாலும், அதற்கும் பலனில்லாதநிலை தொடர்கிறது.

அதனால் ரயில் கோரிக்கைகளுக்காகவும், தேவைகளுக்காகவும், எல்லாக் கட்சியினரும், அமைப்பினரும் இணைந்து போராட வேண்டுமென்று, மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இரு கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். கட்சி பேதம் இல்லைபொள்ளாச்சி எம்.பி., (தி.மு.க.,) சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ.,(அ.தி.மு.க.,) பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகிய மூவரும், மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஒரே மாதிரியான மனுக்களை அனுப்பியுள்ளனர்.

அதில், தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை, வாரத்தில் ஏழு நாட்களும் இயக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில், இப்போது பொள்ளாச்சியில் தினமும் காலை 7:25க்குக் கிளம்புகிறது; கோவையில் மாலை 6:45 மணிக்குப் புறப்படுகிறது. சனி மாலையும், ஞாயிறு காலையும் இந்த ரயில் இயக்கப்படுவதில்லை.

ஆனால், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏராளமான மக்கள் இவ்விரு நகரங்களுக்கு இடையில் மருத்துவம், வர்த்தகம் மற்றும் குடும்பத்தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளின் பொருட்டு, இந்த ரயிலை ஏழு நாட்களும் இரு வேளைகளிலும் இயக்க வேண்டுமென்று அதில் கோரியுள்ளனர். இந்த கோரிக்கையாவது ஏற்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.கோவை-மேட்டுப்பாளையம் இடையே, வாரத்தில் ஏழு நாட்களும் தினமும் ஐந்து முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கோவை-பொள்ளாச்சி இடையிலும், அதிகளவு எண்ணிக்கையில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டுமென்பது, நீண்ட காலக் கோரிக்கையாகவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe