கோவை : மோடி ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் எங்கள் கலை நிகழ்ச்சிகள் இருக்கும்- காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் தெரிவிப்பு.
கோவையில் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு தலைவர் சந்திரசேகரன்,
அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகரில் ஏதாவது ஒரு இடத்தில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவுவதற்கு ஆலோசனை செய்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கலைப்பிரிவின் சார்பில் மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கலை பிரிவின் சார்பாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் குறிப்பாக பாஜக மோடி தலைமையிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறுகின்ற வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார். மோடியின் ஆட்சி ஊழல் ஆட்சியாக மக்களிடத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்த அவர், அண்மையில் சிஐஜி அறிக்கை வெளிவந்து அவர்களுடைய முகமூடி கிழிகின்ற வகையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அதனை பாஜக வினர் அதை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார். வானதி சீனிவாசன் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் என கூறிய அவர், ஒரே எண்ணான 999 என்ற எண்ணில் ஏழரை லட்சம் பேர் சேர்ந்தது எப்படி? என்றும் , ஏழு ஆதார் கார்டு எண்களை பயன்படுத்தி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
எனவே இவர்களுடைய திட்டங்களும் தோல்வி அடைந்துள்ளதாகவும் டிஜிட்டல் இந்தியா என்று இவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களும் முழுமையாக தோல்வி அடைந்துள்ளதாகவும் கூறினார். அதனை மறைப்பதற்காக வேறு வேறு திட்டங்களையும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் மற்றவர்கள் மீது சாட்டுகிறார்கள் என்றார். இதையே அவர்கள் வாடிக்கையாகவும் வைத்துள்ளதாகவும் கூறினார்.
2 கோடி பெருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லிவிட்டு 70 ரூபாய் இருந்த விலையை 102 ரூபாயாக ஆக்கியது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை குறைப்போம் என்று கூறிவிட்டு தற்போது உயர்த்தியது, சமையல் எரிவாயு விலையை 400 ரூபாய் இருந்ததை தற்போது 1000 ரூபாய்க்கு மேல் உயர்த்தி உள்ளது, மேலும் அதற்கான மானியத்தை குறைத்தது,
இதுபோன்று ஏழைகள் மீது சுமைகளை சுமத்துவதையே இந்த அரசு 9 ஆண்டு கால சாதனையாக கொண்டுள்ளது என்றார். எனவே இவற்றை எல்லாம் பிரச்சாரத் திட்டத்தின் மூலம் எடுத்துச் செல்கின்ற விதத்தில் நாங்கள் செயல்படுவோம் எனவும் வருங்காலத்தில் ராகுல் காந்தி பிரதமராகும் வகையில் எங்கள் செயல்பாடுகள் இருக்கும் என்றார்.
நீட் தேர்வை பொறுத்த வரை எங்களுடைய கொள்கைகள் ஒரே மாதிரி தான் உள்ளது என தெரிவித்த அவர், நீட்டை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்றார். தேவைப்படும் மாநிலங்களில் நீட்டை ரத்து செய்து விடலாம் என்று தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது சரத்து இருந்தது என கூறிய அவர், ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சரத்து நீக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் நீட் வேண்டும் என்ற கொள்கையை கொண்டு வந்துள்ளார்கள் என்றார். தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை என்றுதான் சொன்னார்களே தவிர அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை என்று சொன்னது போல எனக்கு தெரியவில்லை என்றார்.
மேலும் யாருக்கு தேவை உள்ளதோ அவர்களுக்கு அந்த பணம் சேர்வது தான் நியாயமாக இருக்கும் அதைத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றார். ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் அவர்கள் வாக்குறுதி அளித்ததில் எதை நிறைவேற்றினார்கள் என்று குறிப்பெடுத்தால் எதுவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் எனவும் திட்டத்தை மட்டும் அறிவித்துவிட்டு அதன் செயல்பாடுகளை பார்த்தால் வெறும் பூஜ்ஜியமாகத்தான் உள்ளது என்றார்.
மேலும் பாஜகவினர் திட்டம் குறித்து யாரேனும் குற்றம் சாட்டினால் அவர்களை தேச விரோதிகள் என்று குற்றம் சாட்டுவது தான் அவர்களது வாடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது என தெரிவித்த அவர் தற்போது இந்தியா என்ற விருட்சம் உருவாகி 2024 ஆம் ஆண்டு இந்த ஆட்சியை வீழ்த்தும் என்றார்