நம்மில் யாருமே சுகபோகமாக வாழ்வதற்கு கடன் வாங்குவதே கிடையாது. நமக்கு இருக்கும் கஷ்டங்களுக்கு தற்காலிக தீர்வாகத்தான் வங்கிகளிலும், தனியார் கடன் நிறுவனங்களிலும், மைக்ரோ பைனான்ஸ்களிலும் கடன் வாங்குகிறோம்.
இப்படி அவசரத்திற்கு என்று கடன் வாங்கிய பிறகு நம் மக்கள் படும் திண்டாட்டங்களை பல வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள். வட்டி மேல் வட்டி, எத்தனை மடங்கு அசலை கட்டினாலும் "இன்னும் பாக்கி இருக்கு" என்று வக்கிரத்துடன் வசூலிக்கும் மனித கூட்டங்களும் நம்மைப் போலவே இப்பூவுலகில் பொறந்து வளர்ந்தவங்க தானே..?
அவர்களுக்கு பணம் என்பது எலிக்கு வைக்கும் கெட்டுப்போன வடையைப் போல காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பணத்தால் எதையும் எட்டலாம் என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள் அல்லது, அவர்களது கஷ்டத்தை பண முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு ஆட்டுவிக்கிறார்கள்.
இதுவே நம் மக்கள் நம் மீது ஏவி விடப்படுவதற்கோ அல்லது ஏமாற்ற நினைப்பதற்கோ மூல காரணமாக இருந்து வருகிறது.
இவற்றை தாண்டிய சிலர் பணத்தின் மீது தீரா பற்று கொண்டவர்கள். அவர்களை நம்மால் அல்ல, யாராலும் சரிப்படுத்த முடியாது.
சரி, இந்த செய்தி ஆசை கொண்ட மனிதர்களுக்காக அல்ல. சிரமங்களுக்காக கடன் வாங்கி அல்லல்படும் மக்களுக்காவே.
பொதுவாக ஒருவர் வங்கியிலோ அல்லது மைக்ரோ பைனாஸ் நிறுவனங்களிடமோ கடன் வாங்கும் முன் உறவுகள், நண்பர்கள், பழகியவர்களிடம் கடனாக பணத்தை கேட்பார்கள். சிலர் நெருங்கிய உறவுகளோடு நிறுத்திக் கொள்வார்கள். காரணம் என்ன? கடன் வாங்குவது யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற ஒரு நினைப்பில் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் வங்கி நிறுவனத்திலோ அல்லது பைனான்ஸ் நிறுவனத்திலோ கடனுக்கு விண்ணப்பிப்பார்கள்.
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட நிதி நிறுவனத்தினர் அதனை பரிசீலனை செய்வார்கள்.
அவர்களது வங்கி விவரங்களில் வரவு, செலவு கணக்குகளை வைத்து இவருக்கு கடன் வழங்கலாமா? அல்லது கூடாதா என்பதை? கடன் வழங்கும் நிறுவனங்கள் முடிவு செய்யும்.
ஆனால் சில தனியார் வங்கிகளும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் ஒருவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்பதை அறிந்து கொண்டே அவருக்கு தாராளமாக கடனை வழங்கும்.
காரணம், அதற்கான வட்டி மற்றும் கடனை வசூலிக்க வைத்திருக்கும் ஏஜென்சிகள்.
கடன் வழங்கும் போதே நாம் அதற்கான வட்டியை மட்டும் பார்த்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம். உதாரணமாக ஒரு வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வட்டிக்கணகில் கடன் தொகையை பெற்றுக் கொள்கிறோம்.
ஒரே ஒரு தவணை குறித்த நேரத்தில் செலுத்தாமல் போனாலோ அல்லது, ஒரு மாதம் கழித்து திரும்ப செலுத்தும் நிலை நேர்ந்தாலோ அந்த நேரத்தில் நமக்கு விதிக்கப்படும் அபராத தொகையை வட்டியாக நாம் கணக்கிடுவதில்லை.
ஒரே ஒரு நாள் நாம் நமது இ.எம்.ஐ தொகையை தாமதமாக செலுத்தினால் ரூ.500 முதல் ரூ.1000 வரை நம்மிடம் அபராதத் தொகையாக வசூலிக்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாயை நாம் கடனாக 10 சதவீத வட்டி விகிதத்தில் பெற்றால் ரூ.4,614 என்பதை மாதாந்திர தவணைத் தொகையாக செலுத்த வேண்டும்.
ஆனால் ஒரே நாள் தாமதத்திற்கு ரூ.500-ஐ அபராத தொகையாக விதிக்கும் பட்சத்தில் அந்த மாதத்திற்கு மட்டும் சுமார் 18 சதவீதமாக நமது வட்டி விகிதம் மாறிவிடுகிறது.
இது எவ்வளவு பெரிய கொள்ளை என்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா.?
அபராதம் என்ற பெயரில் இத்தகைய கடன் தொல்லையில் சிக்கி சிக்கித்தான் பல ஏழைகளும், நடுத்தர மக்களும் தங்களது மாதாந்திர பட்ஜெட்-ஐ கை மீறி போகவிட்டு கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.
நம்பகமான கடன் நிறுவனம் என்று நீங்கள் நினைக்கும் கடன் வழங்கும் சில நிதி நிறுவனங்கள் இன்று வணிக வளாகங்களில் தங்களுக்கான கவுண்டர்களை அமைத்து நீங்கள் வாங்கும் ஷேவிங் டிரிம்மர்கள் தொடங்கி, வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தையும் கடனில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு பின்னால் பல சூட்சமங்கள் உள்ளன. நீங்கள் கடன் வாங்கும்போதே அதற்கான ப்ராசஸிங் (Processing) கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு சில நிறுவனங்கள் பெரிய மனது வைத்து ரூ.1,000 என்று ப்ராசஸிங் கட்டணம் விதிக்கின்றன. பல நிறுவனங்கள் ரூ.2,000-ம் தொடங்கி ரூ.3,500 வரை கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
இந்த கட்டணத்தை உங்கள் மாதாந்திர வட்டியாக மட்டும் சேர்த்து உங்கள் வட்டி விகிதத்தை கணக்கிட்டு பாருங்கள்..! உங்களிடம் வசூலிக்கப்படும் உண்மையான வட்டி விகிதம் தெரிந்துவிடும்.
"இப்படியான வட்டி விகிதத்தில் கடன் வாங்கிவிட்டோமே..!" என்று புரிந்து கொள்ளவே நம் மக்களுக்கு சில மாதங்கள் ஆகிவிடுகிறது.
தொடர்ந்து உழைத்த அணத்தை வீணக்க மனமில்லாலும், தாம் ஏமாற்றப்படுவதையும் உணர்ந்து கடன் தொகையை செலுத்த மனமில்லாமல் காலம் தாழ்த்த தொடங்குகின்றனர்.
அதன் பிறகே, ஏஜென்சி நபர்கள் அந்த நபர்களை அணுகுகிறார்கள். அதற்கு பிறகு நடைபெறும் சண்டை, சச்சரவுகள் நாம் அறிந்த ஒன்றே.
சரி.. இப்போது டைட்டிலில் சொன்ன விஷயத்திற்கு வருவோம்...
சில தனியார் வங்கிகள் உட்பட பல்வேறு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு கடன் வழங்குவது கிடையாது. கடனை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டால் போலீசாரிடம் சென்று நேருக்கு நேர் மல்லுக்கட்ட முடியாது என்பதற்காகவே இப்படியான பாலிசியை வைத்திருக்கிறார்கள்.
காவலர்களுக்கும் நிதி நெருக்கடி என்ற நிலை ஏற்படும். சொந்த வீடு, திருமணம், சொந்தமாக கார், பைக் என்ற கனவுகள் அவர்களுக்கும் இருக்கும் தானே..?
இதனால் தான் தமிழக அரசு, காவலர்களுக்கு என பிரத்தியேகமாக அவர்கள் துறை சார்ந்து கடன் வழங்கி வருகிறது.
சரி இவர்களை விடுவோம். ரிப்போர்டர்கள் மற்றும் வக்கீல்களின் கதை மிகவும் மோசம்.
இவர்கள் கடன் கேட்டு நிதி நிறுவனங்களை அணுகும் போது "நீங்கள் தொட்டதுக்கெல்லாம் சட்டம் பேசுவீர்கள்.. அதனால் எங்கள் நிறுவனத்திடம் உங்களுக்கு கடன் தருவதற்கான பாலிசி இல்லை" என்று ஒரே வார்த்தையை கூறி இப்படிப்பட்ட நிதி நிறுவனங்கள் கடன் தர மறுத்துவிடுவார்கள்.
அரசின் கரிசனமும் இல்லாமல், வங்கிகளின் ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த இரு துறைகளை சேர்ந்தவர்களும் அவசரத்திற்கு என்ற ஒரு கடன் வாங்கக்கூட திண்டாடி வருகிறார்கள்.
ஏனென்றால் செய்திகளை சேகரிக்கும் நிரூபர்களும், வழக்கறிஞர்களும் இது போன்ற பல வழக்குகளை சந்தித்திருப்பார்கள்.
கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது அபராதம் என்ற பெயரில் அநியாயமாக பணத்தை வசூலித்தாலோ அவர்கள் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகுவார்கள்.
இதனால் தான் இந்த துறையினருக்கு சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவது இல்லை.
செய்தித் தலைப்பின் சாராம்சம் இவ்வளவே..!!
EMI-ல் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்றோ, விரைவாக லோன் கிடைக்கிறது என்றோ, அடுத்தமுறை ஆசைப்படுவதற்கு முன் இந்த செய்தி சற்றே உங்களை சிந்திக்க வைக்கும் தானே...?
-
பொதுநலனுடன்
நியூஸ் க்ளவுட்ஸ் குழு
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!