குழந்தையை கடத்திய பெண் கைதி காவல் நிலையத்தில் உயிரிழப்பு- நீதிமன்ற நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை...

published 1 year ago

குழந்தையை கடத்திய பெண் கைதி காவல் நிலையத்தில் உயிரிழப்பு- நீதிமன்ற நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை...

கோவை: குழந்தைக்கு கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் கைதி காவல் நிலையத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திடீரென உயிரிழந்தார். இது குறித்து கஸ்டடி மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவர் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு தசரா பண்டிகையையொட்டி மாலை போட்டு விரதம் இருப்பதற்காக தனது மனைவி ரதி(32) மற்றும் மகன் ஹரீஸ்(1 1/2) ஆகியோருடன் குலசேகரப்பட்டினம் வந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து விட்டு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். கடற்கரையில் குளிப்பதற்காக சென்றபோது ரதியுடன் நட்பாக பழகிய பெண்மணி ஒருவர் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதற்காக கூட்டி சென்று கடத்தி சென்று விட்டார். நீண்ட நேரம் அவர் வராததால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கடைவீதி பகுதிகளில் தேடிப்பார்த்தனர். 

ஆனால் அந்த பெண்ணையும், குழந்தையையும் காணவில்லை. இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கோயில் பகுதிகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் ஆணுடன் பைக்கில் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து பைக் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவங்கினர். மேலும் அந்த பதிவு எண் மற்றும் அவர்கள் புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தினர். 

விசாரணையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்டது தம்பதியினர் என்பதும், அவர்கள் கோவை மாவட்டம் ஆலாந்துறை பூண்டி முட்டத்துவயல் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே அவர்களை பிடிக்க ஆலாந்துறை போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு பதுங்கி இருந்த தம்பதியினரை பிடித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன்(45), அவரது மனைவி திலகவதி(40) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குழந்தை குறித்த தகவலை விசாரித்தனர். அப்போது குழந்தை சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு கோவை வந்ததாக தெரிவித்துள்ளனர். 

விசாரணையின் போது திலகவதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை போலீசார் போளூவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆத்தூரில் உள்ள திலகவதியின் வீட்டுக்கு சென்று குழந்தையை மீட்டனர். பின்னர் திருச்செந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நீதிமன்ற விசாரணை, போலீஸ் விசாரணையில் யாரேனும் மரணம் அடைந்தால் கஸ்டடி மரணம் 176 ( 1 ஏ) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். அதன்படி இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இன்று மாஜிஸ்திரேட் முன்னிலையில், திலகவதியின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அவர் கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர் உயர் ரத்த அழுத்தத்தால் மயங்கி இறந்தாரா? அல்லது மாரடைப்பா, வேறு காரணமா என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும்’’. என்றார். கோவையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe