நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் ஈஷாவின் சிவராத்திரி விழா- கோவையில் துணை குடியரசுத் தலைவர் பேச்சு...

published 11 months ago

நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் ஈஷாவின் சிவராத்திரி விழா- கோவையில் துணை குடியரசுத் தலைவர் பேச்சு...

கோவை: ஈஷா யோக மையத்தில் நடத்தப்படும் மஹா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுக்குரியது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

 

கோவை ஈஷா யோக மையத்தில் 30ஆவது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் விழாவில் பேசியதாவது:

"சத்குரு முன்னிலையில் நடத்தப்படும் ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் நான் கலந்து கொள்வதை என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமையாகவும் பாக்கியமாகவும் உணர்கிறேன்.  நம் பாரத கலாச்சாரத்தில் மஹா சிவராத்திரி விழா மிக முக்கியமான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் ஈஷாவில் நடத்தப்படும் மஹாசிவராத்திரி விழாவானது தனித்துவமானது. ஈடு இணையற்றது. 

 

உலகம் முழுவதும் உள்ள நவீன காலத்து இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.மதம், மொழி, இனம், தேசம், கலாச்சாரம் என அனைத்து எல்லைகளையும் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக இது திகழ்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது. அத்துடன், ஈஷாவில் கர்மா, பக்தி, ஞானம், க்ரியா என நான்கு மார்கங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. 

சத்குரு யோகாவை உலகம் முழுவதும், பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்று வருகிறார். மனித குல நல்வாழ்விற்காக அவர் மேற்கொள்ளும் அனைத்து செயல்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.

 

இவ்விழாவில் சத்குரு உரையாற்றுகையில், "இன்று நடைபெறும் மஹாசிவராத்திரி விழா ஈஷாவில் நடத்தப்படும் 30 ஆவது மஹாசிவராத்திரி விழாவாகும். 1994 ஆம் ஆண்டு நாம் நடத்திய மஹா சிவராத்திரி விழா, வெறும் 70 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டது. அப்போது 75 வயது பாட்டி ஒருவர் இரண்டே பாடலை இரவும் முழுவதும் பாடிக் கொண்டேயிருப்பார். 

இருப்பினும் அவருடைய பக்தி மெய் சிலிர்க்க வைக்கக்கூடியது.  கடந்த ஆண்டு மஹாசிவராத்திரி விழாவை மட்டும் உலகம் முழுவதுமிருந்து சுமார் 14 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மஹாசிவராத்திரி நாளில் கோள்களின் அமைப்பால், ஒருவரின் உயிர் சக்தியானது இயல்பாகவே மேல்நோக்கி செல்லும். 

எனவே இந்நாள் வெறும் விழிப்புடன் மட்டுமே இருக்கும் நாளாக இல்லாமல், நம் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை விழிப்படைய செய்யும் நாளாகவும் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்." எனக் கூறினார்.

இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் துணைவியார் சுதேஷ் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe