இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தியுள்ளார் அண்ணாமலை; கோவையில் முத்தரசன் பேச்சு!

published 2 weeks ago

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தியுள்ளார் அண்ணாமலை; கோவையில் முத்தரசன் பேச்சு!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. 




 


இக்கூட்டத்தில் பேசிய முத்தரசன், இந்தியாவை காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதில்லை. இரு மாநில முதல்வர்களை சிறையில் அடைத்துவிட்டு தேர்தல் நடத்தும் பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹிட்லர் முசோலினி போன்றவர்களின் இறுதி காலகட்டம் எப்படி இருந்தது என்பதை பிரதமர் நரேந்திர மோடி எண்ணிப் பார்க்க வேண்டும். 




2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக சொன்னது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்கின்ற மோடியின் கேரண்டி என்ன ஆனது? 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி கொடுத்த வாக்குறுதிகளை பற்றி கேட்டால் கச்சத்தீவு பிரச்சனையை பேசுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை அரசுக்கு ஒரு கடிதமாவது எழுதியது உண்டா? 10 ஆண்டுகள் என்ன அமைச்சர்  சீதாராமனுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தாரா?  ஹிந்தி மொழி திணிப்பு தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டங்களை  கொச்சைப்படுத்தி அண்ணாமலை விமர்சித்திருப்பது மிகவும் கீழ்த்தரமான செயல்.





இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சிறப்பான திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார். ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடியோ மக்களை திசை திருப்பும் வகையில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வாஜ்பாய் மற்றும் சாவர்க்கர் இரண்டு பேரை தவிர சுதந்திரப் போராட்டத்தில் அந்த கட்சியினர் யாரும் ஈடுபடவில்லை. ஈடுபட்ட இருவரும் கைதான இரண்டே நாட்களில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்த வரலாற்றை அவர்கள் படிக்க வேண்டும். 

அதிமுக தேர்தலுக்குப் பிறகு இருக்காது என அண்ணாமலை பேசி வருவது அவரது அறியாமையை காட்டுகிறது. இதே போல் இந்தியாவில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இருக்காது என மோடி பேசுவதும் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நிறைவேறாது. 19ஆம் தேதி நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw