மின்சார கட்டண உயர்வு- முதல்வரை சந்திக்க கோவையில் உள்ள தொழில்துறையினர் திட்டம்...

published 7 months ago

மின்சார கட்டண உயர்வு- முதல்வரை சந்திக்க கோவையில் உள்ள தொழில்துறையினர் திட்டம்...

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் அமைப்புகள் சார்பில் தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வால் தொழில்துறையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கொடிசியா மற்றும் சிறு குறு தொழில் அமைப்பினர், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், பழைய மின் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

தொழில்துறையினருக்கான நிலைக்கட்டண தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

பழைய கட்டண முறையின்படி நிலை கட்டணம் 35 ரூபாயாக இருந்த போது தொழில்துறையினர் பலனடைந்து வந்ததாகவும், தற்போது 160 ரூபாயாக நிலை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரால் சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கோவையின் பிரதான உற்பத்தி தொழிலாக உள்ள பம்ப் உற்பத்தி மற்றும் அது சார்ந்த பவுண்டரி தொழில்கள், மழைக்காலத்தில் சரிவை சந்தித்து வரும் சூழலில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் இருக்கும்போதும் நிலை கட்டணம் வசூலிப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கினர். இது சிறு, குறு தொழில்களை மேலும் நலிவடையச் செய்யும் எனவும், எனவே நிலை கட்டணத்தை பழைய படி அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும், சூரிய தகடு மின்சார உற்பத்திக்கு நெட்வொர்க்கிங் சார்ஜஸ் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் எனவும் தொழில் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகவும் கொடிசியா மற்றும் தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe