சட்டப்படியான போனஸ் வேண்டும்- கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்...

published 2 weeks ago

சட்டப்படியான போனஸ் வேண்டும்- கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்...

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இந்த  பேச்சுவார்த்தையின் போது தூய்மை பணியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனம் நான்காயிரம் ரூபாய் போனஸ் தருவதாக தெரிவித்த நிலையில் தொழிற்சங்கங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பலருக்கு 1800 ரூபாயும் , ஒரு சிலருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும் எனவும் வங்கிக் கணக்கில் போனஸ் என அனுப்பப்பட்டுள்ளது. 

ஒப்பந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நிறைவடையும் முன்பாக தன்னிச்சையாக போனஸ் தொகையை தீர்மானித்து வங்கிக் கணக்கில் செலுத்தியதை கண்டித்து இன்று  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து பங்கேற்றனர். மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும், தனியார் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்ணயித்த போனஸ்  தொகையை ரத்து செய்துவிட்டு பேச்சுவார்த்தை மூலம் போனஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்,  ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வார விடுமுறை , இஎஸ்ஐ , கூடுதல் பணிக்கு கூடுதல் சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மேலும் தூய்மை பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு விடாமல்,  ஒப்பந்த தூய்மை பணிகளை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தினர்.

தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe