சிறுபான்மையின மக்களுக்கு முதல்வர் ஒருவர் தான் உண்மையான பாதுகாப்பு-தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் கோவையில் பேட்டி...

published 21 hours ago

சிறுபான்மையின மக்களுக்கு முதல்வர் ஒருவர் தான் உண்மையான பாதுகாப்பு-தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் கோவையில் பேட்டி...

கோவை: அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் தான் உண்மையான பாதுகாப்பு என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச தெரிவித்துள்ளார்.

மாவட்ட பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச மற்றும் ஆணையத்தின் உறுப்பினர் முகமது ரஃபி தலைமையில், கலந்துரையாடல் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச கூறுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து சிறுபான்மை மக்களுக்காக முதலமைச்சர் வகுத்துள்ள திட்டங்கள் குறித்து விளக்குவதற்காகவும் இவை அனைத்தும் சிறுபான்மை மக்களை சென்றடைந்ததா என்பன உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வதற்காகவும் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார்.

இந்த கூட்டத்தின் போது, கல்லறை தோட்டம் பள்ளிவாசல், பள்ளி கல்லூரிகளின் அனுமதி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து எழுப்பப்பட்ட பிரச்சனைகள் பலவற்றிற்கு இந்த கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டதாகவும் கூறினார்.

அனைத்து சிறுபான்மையின மக்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஒருவர் தான் உண்மையான பாதுகாப்பு என்றும் எந்த மாநிலமும் செய்ய முடியாத விஷயங்களையும் முதலமைச்சர் சிறுபான்மையின மக்களுக்காக செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும், கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் ஆகியவற்றிற்கான இடம் தொடர்பான பிரச்சனை தான் பிரதானமாக உள்ளது என்றும் இதில் உள்ள நிலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கல்லறை தோட்டம் அமைப்பதற்காக கொடுக்கப்பட்ட பல மனுக்கள் கிடப்பில் இருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்லறை தோட்டம் அமைப்பதற்கான இடங்களில் தடங்கல்கள் இருப்பதனாலேயே மனுக்கள் கொடுக்கப்படுவதாகவும் அந்த தடங்கல்கள் குறித்த கேட்டறிந்ததாகவும் கூறிய அவர், தடங்கல்களை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் ஒரு கண்காணிப்பு அமைப்பு என்று கூறிய அவர், இதுவரை வந்த 300-க்கும் மேற்பட்ட மனுக்களில் 200க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஆணையத்திற்கென்று நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் சிறுபான்மையினர் நல இயக்கத்திற்கு தான் நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் கூறிய அவர், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் மற்றும் பரிந்துரைகள் வழங்கும் அமைப்புதான்  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் என்றார்.

கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பின்மை  தவிர்க்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளதாகவும் சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe