தொடர் விடுமுறை: பொள்ளாச்சியில் கூடுதலாக 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

published 2 years ago

தொடர் விடுமுறை: பொள்ளாச்சியில் கூடுதலாக 35 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

 

கோவை: பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

தீபாவளி, பொங்கல் என முக்கியப் பண்டிகைக் காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தைப் பொறுத்துக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2 வாரமாக பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைந்து, வெளியூர் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இதற்கிடையே, வரும் 30-ஆம் தேதியுடன் பள்ளிக் காலாண்டுத் தேர்வு நிறைவடைந்து அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை எனத் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதைத் தொடர்ந்து 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ஆம் தேதி வரை எனத் தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாகக் கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாகக் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
"பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூரப் பகுதிகளுக்கும் எனத் தினமும் 190 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

விசேஷ நாட்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ஆம் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜைப் பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்வர்.

இதனால், வெளியூர்களுக்குக் கடந்த ஆண்டை விடக் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை ஒன்றாக வருவதால், 35 பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe