ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வேண்டும்: 1000 விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

published 2 years ago

ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வேண்டும்: 1000 விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

கோவை: கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு. பழனிச்சாமி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கு. செல்லமுத்து கோரிக்கை விளக்கம் குறித்த உரையை நிகழ்த்தினார்.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு. பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது: 
"கிடப்பில் உள்ள ஆனைமலை நல்லாறு திட்டப் பணிகளைத் தமிழக அரசு உடனே துவங்க வேண்டும். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனப் பகுதிக் கரையோர விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளின் கிணற்றில் உள்ள மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது. பரம்பிக்குளம் பாசனத் திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு அநீதி இழைக்கக் கூடாது.

தென்னைக்குத் தான் சோதனை, விவசாயிக்குத் தான் வேதனை, தேங்காய், மட்டை, காலி தொட்டிக்கும் விவசாயத்துக்கும் விலை இல்லை. தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மழைக்காலங்களில் நீர் திறப்புப் பாசன கால்வாயைத் தவிர்த்து மற்ற பாசனக் கால்வாய்களில் உள்ள குளம், குட்டையை நீர் நிரப்ப ஆவணம் செய்ய வேண்டும்.

தற்போது பி. ஏ. பி பாசன நிலங்களில் பல நிலங்கள் தொழிற்சாலைகள் ஆகவும், காற்றாலைகளாகவும் மாறி உள்ளது. இந்த நிலங்களைப் பாசனத் திட்டத்திலிருந்து நீக்கி மூன்று மண்டலங்களாக மாற்ற வேண்டும். பாசன விவசாயிகள், தென்னை சார்பில் தொழில் புரியும் விவசாயிகள் உள்ளிட்டப் பிரதிநிதிகள் தமிழக முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்கக்  கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் பெரியசாமி, சூலூர் எம். எல். ஏ கந்தசாமி, பி. ஏ. பி கரையோர விவசாயிகள், கோவை, ருப்பூர் விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், விவசாயக் கூட்டமைப்புகள், கொங்கு மண்டல மேற்குப் பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe