குன்னூரில் தொழிற்சாலைக்குள் ஏறிக் குதித்து சாக்லெட்டுகளை ருசித்த கரடி

published 2 years ago

குன்னூரில் தொழிற்சாலைக்குள் ஏறிக் குதித்து சாக்லெட்டுகளை ருசித்த கரடி

 

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டெருமை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கரடிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

இந்த வன விலங்குகள் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாகக் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கரடிகள் ஊருக்குள் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் உணவகங்களில் புகுந்து உணவுகளைச் சாப்பிடுவது, பொருட்களைச் சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பார்க் அருகிலுள்ள ஹை பீல்ட் எஸ்டேட் பகுதியிலிருந்து இரவு நேரத்தில் கரடி ஒன்று வெளியே வந்தது. நேராகக் கரடி அங்குள்ள ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்திற்குச் சென்று தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சித்தது. அது திறக்காததால், கரடி தடுப்புச் சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்தது.

பின்னர் தொழிற்சாலையில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்குத் தயாரித்து வைக்கப்பட்டிருந்த இனிப்பு மிக்க 2 கிலோ ஹோம்மெட் சாக்லெட்டுகளை எடுத்துச் சாப்பிட்டது. பின்னர் சிறிது நேரம் அங்கேயே சுற்றித் திரிந்து விட்டு வெளியில் சென்றது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சி. சி. டி. வி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை நேற்று பணிக்கு வந்த தொழிற்சாலையின் உரிமையாளர் சேகர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். 
இதற்கிடையே இங்கு நடமாடும் கரடியைக் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரடி சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்து, சாக்லெட்டுகளைச் சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe