அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என வாக்குவாதம்: அ.தி.மு.கவினர் 3 பேர் மீது வழக்கு

published 2 years ago

அரசு பேருந்தில் ஓசி டிக்கெட் வேண்டாம் என வாக்குவாதம்: அ.தி.மு.கவினர் 3 பேர் மீது வழக்கு

 

கோவை: கோவை காந்திபுரத்திலிருந்து பாலத்துறைக்கு அரசு நகரப் பேருந்து செல்கிறது. இந்த பேருந்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயணிக்கின்றனர்.

சம்பவத்தன்று காலை அரசு நகரப் பேருந்து காந்திபுரத்திலிருந்து பாலத்துறையை நோக்கிப் புறப்பட்டது. பேருந்தில் வால்பாறையைச் சேர்ந்த வினித் என்பவர் நடத்துநராக இருந்தார்.

பேருந்து மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது பாலத்துறைக்கு செல்வதற்காகக் காத்திருந்த துளசியம்மாள்(68) என்ற மூதாட்டி ஏறினார். நகரப் பேருந்தில் பயணிக்கப் பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், நடத்துநர் பேருந்தில் ஏறியதும் மூதாட்டிக்கு இலவச பயணச்சீட்டைக் கிழித்துக் கொடுத்தார்.

அப்போது அந்த மூதாட்டி பணத்தை எடுத்து கண்டெக்டரிடம் நீட்டினார். உடனே நடத்துநர், "பாட்டிமா இதில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் இலவசம். காசு வேண்டாம். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்." என்றார்.

ஆனால் அந்த மூதாட்டி, "நீ பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடு. இல்லையென்றால் எனக்கு சீட்டு வேண்டாம்." எனத் தெரிவித்தார். இருப்பினும் கண்டெக்டர் டிக்கெட்டை மூதாட்டியிடம் கொடுக்க முயன்றார்.

ஆனால் மூதாட்டியோ அதனை வாங்க மறுத்ததுடன், "நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். நான் டிக்கெட்டுக்கு பணம் தருவேன். காசு இல்லாமல் தரும் டிக்கெட் எனக்கு வேண்டவே வேண்டாம். பணத்தைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடு." என அடம் பிடித்தார்.

அதற்கு நடத்துநர், "அதான் பிரீயா விட்டுட்டாங்களே, போங்கம்மா." என்றார். ஆனால் மூதாட்டி வலுக்கட்டாயமாக நடத்துநரின் கையில் பணத்தைத் திணித்தார்.

இதையடுத்து நடத்துநரும் வேறுவழியில்லாமல் மூதாட்டியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பயணச்சீட்டு மற்றும் மீதி சில்லறையைக் கொடுத்துச் சென்றார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மூதாட்டியை வேண்டுமென்றே அரசு நகரப் பேருந்தில் சீட்டு கேட்டுத் தகராறு செய்யுமாறும் சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாகவும் தி. மு. க-வினர்  மாவட்டக் காவல்துறை சூப்பிரென்டண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை நகர தி. மு. க செயலாளரான ராமு என்பவர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"மதுக்கரை குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த அ. தி. மு. க-வினர் பிரித்தவிராஜ்(40), அவ்வையார் வீதி மதிவாணன்(33), விஜய் ஆனந்த் ஆகியோர்  வேண்டுமென்றே  தங்களது கட்சியைச் சேர்ந்த துளசியம்மாள் என்ற மூதாட்டியை பேருந்தில் வரவழைத்து பெண்களுக்கு இலவச டிக்கெட் என்றும் தெரிந்தும், டிக்கெட் கேட்குமாறு கூறி  சண்டை போட வைத்துள்ளனர்.

தற்போதைய தி. மு. க அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ எடுத்து, அந்த  சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு தி. மு. க அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் அ. தி. மு. க-வைச் சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe