கோவையில் ஆயுத பூஜையையொட்டி 100 டன் பூக்கள் விற்பனை

published 2 years ago

கோவையில் ஆயுத பூஜையையொட்டி 100 டன் பூக்கள் விற்பனை

 

கோவை: கோவை ஆர். எஸ். புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.

இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன. கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது கோவை பூ மார்க்கெட்டில் டன் கணக்கில் பூக்கள் விற்பனையானது. இதன் காரணமாகக் கடந்த மாதம் தொடக்கத்தில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. அதன் பின்னர் பூக்கள் விலை குறைந்தது.

இந்த நிலையில் இந்த மாதம் நவராத்திரி பண்டிகை தொடங்கியதால் கடந்த இரண்டு வாரங்களாகக் குறைந்திருந்த பூக்கள் விலை மீண்டும் அதிகரித்தது. மேலும் நேற்று ஆயுத பூஜை என்றதால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்யவும், வாகனங்களுக்கும், வேலை செய்யும் இடங்களில் பூஜை செய்யவும் பூக்கள் வாங்க பூ மார்க்கெட்டில் குவிந்தனர்.
விஷேச நாள் என்பதால் பூக்களின் விலையை பொருட்படுத்தாமல் மக்கள் பூக்களை வாங்கி சென்றனர்.

பூ மார்க்கெட்டில் மொத்தம் 240 கடைகள் உள்ளன. இந்த ஒவ்வொரு கடைகளிலும் 600 கிலோ வரை பூக்கள் விற்பனையானது. நேற்று மட்டும் பூ மார்க்கெட்டில் 100 டன் பூக்கள் விற்பனையானது.

ஆனால் இன்று பூக்கள் விலை சற்று குறைந்து விற்பனையானது. அதன்படி மல்லி ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. செவ்வந்தி ரூ. 500, ரோஜா ஒரு கிலோ ரூ. 400, அரளி ரூ. 400, தாமரை ஒன்று ரூ. 10, கோழிக்கொண்டைப் பூ ரூ. 120 முதல் 150 வரை, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ. 30, சம்பங்கி ரூ. 40 முதல் 50 வரை, செண்டுமல்லி ரூ. 130, வாடாமல்லி ரூ. 120 வரை விற்பனையானது.

இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும்,  நேற்று போன்று இன்று வியாபாரம் இல்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe