காரமடையில் காயமடைந்த தேவாங்கு: மீட்ட சிறப்பு அதிரடிப் படையினர்

published 2 years ago

காரமடையில் காயமடைந்த தேவாங்கு: மீட்ட சிறப்பு அதிரடிப் படையினர்

 

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டுப் பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து  கால்நடைகளைத் தாக்கியும், விளைநிலங்களைச் சேதப்படுத்தியும் வருகின்றன. மனித-விலங்கு மோதலும் ஏற்படுகிறது. மான், மயில் ஊருக்குள் புகும்போது நாய்கள் அதனைக் கடித்துக் காயப்படுத்தி விடுகின்றன. அதனைப் பொதுமக்கள் மீட்டுச் சிகிச்சை அளித்து வனத்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திக்கடவு முகாமில் உள்ள சிறப்பு அதிரடிப் படையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு 4 வயது தேவாங்கு ஒன்று ஒரு கண் பார்வையற்று கையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியவாறு பரிதாபமாக அமர்ந்து இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறப்பு அதிரடிப் படையினர் தேவாங்கை மீட்டு தண்ணீர் கொடுத்து அரவணைத்தனர். பின்னர் அதனைப் பத்திரமாக மீட்டு வெளியே வந்து காரமடை வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காரமடை வன அலுவலர் திவ்யா தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் தேவாங்கை ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் சிகிச்சைக்காகத் தேவாங்கை வெள்ளியங்காடு கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். தேவாங்கிற்குச் சிகிச்சை அளித்து அதனைக் கண்காணித்துப் பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கழுகு கொத்தி தேவாங்கு காயம் அடைந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அல்லது அதனை யாராவது வேட்டையாடும் போது காயம் அடைந்து தப்பியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe