ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் : கோவையில் அமைச்சர் பேச்சு

published 2 years ago

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் : கோவையில் அமைச்சர் பேச்சு

கோவை: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், கரும்பு இனப்பெருக்க நிறுவனம் ஆகியவை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உழவர்கள் கூட்டம் நிகழ்ச்சியை நடத்தியது. இதில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வரவேற்றார். 

விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது: எதிரும் புதிருமாக உள்ள நாங்கள் மேடையில் ஒன்றாக அமர்ந்துள்ளோம். விவசாயிகளுக்காக ஒன்றாக இருப்போம். கொப்பரை தேங்காய் விலையை ஒன்றிய தென்னை வாரியத்திடம் தமிழக அரசு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். தமிழகத்தில் 41 இடங்களில் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தோம். 

இதனால், கொள்முதல் செய்யப்படும் அளவு அதிகமானது. வேளாண்மைக்கு என தமிழக அரசு தனி பட்ஜெட் அறிவித்துள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாய துறை பயன்பெறும் வகையில் வேளாண்மை பட்ஜெட் இருக்கும். தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பட்ஜெட் இருக்கும். ஒன்றிய அரசு 50 ஆயிரம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயம் செய்ததில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்துள்ளோம். 

ஆண்டு முழுவதும் கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஒரு டன்னுக்கு ரூ.105 உள்ளது. அதனை ரூ.150 ஆக ஒன்றிய அரசு உயர்த்த வேண்டும். தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe