தீபாவளிக்கு பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்.. மீறினால் என்ன நடவடிக்கை.. கோவை கமிஷனர் அறிவிப்பு

published 2 years ago

தீபாவளிக்கு பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்.. மீறினால் என்ன நடவடிக்கை.. கோவை கமிஷனர் அறிவிப்பு

கோவை:

கோவை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளியன்று குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் மாநகர காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர்   பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது என்பது முழுமையாக தடை செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளவாறு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். 

ஆண்டிமணி, லித்தியம், மெர்குரி, ஆர்செனிக், காரீயம், பேரியம் உப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க வேண்டும், வெடிக்க வேண்டும். சரவெடிகள் விற்பதும், வெடிப்பதும் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. 

உரிமம் வழங்கப்பட்ட விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்க வேண்டும். பட்டாசு விற்பனையாளர்கள் பெட்ரோலியம், வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகள் அடங்கிய மற்றும் ஒலியை எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

அமைதிப்பகுதிகள் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக ஆஸ்பத்திரிகள், நர்சிங் ஹோம்ஸ், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்கக் கூடாது.  பட்டாசு கடைகளில் வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்படும் இடங்களிலும், விற்பனை செய்யும் இடங்களிலும் போதிய அளவில் தீயணைப்புக் கருவிகள், தண்ணீர், மணல் வாளிகள் ஆகியவற்றை விற்பனையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

ஆஸ்பத்திரி, பெட்ரோல் பங்க், பிறவகை எரிபொருள் நிரப்பும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய துணிமணிகள் விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

போக்குவரத்து உள்ள சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. ராக்கெட் பட்டாசுகளை திறந்த இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும். டிரான்ஸ் பார்மர் உட்பட மின்கடத்திகள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக் கக்கூடாது.

அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும், பொறுப்பில்லாமலும், விளையாட்டுத் தனமாகவும், குடிபோதையிலும் பட்டாசுகளை வெடித்து அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சொத்துகளுக்கு தீங்கு மற்றும் சேதம் ஏற்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறி தன்னிச்சையாக, கீழ்படியாமல் நடந்து கொள்பவர்கள் மீது தக்க குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து வணிக வளாகங்கள், நகை, ஜவுளிக்கடைகள், உணவகங்கள், மால்களில் உள்ள கடைகள் ஆகியவற்றில் சி.சி.டி.வி காமிராக்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe