கோவையில் பருவகால காய்ச்சலை தடுக்க மருத்துவ குழுக்கள்

published 2 years ago

கோவையில் பருவகால காய்ச்சலை தடுக்க மருத்துவ குழுக்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பருவமழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்புள்ளது.

பருவகால காய்ச்சலை தடுக்க மருத்துவ குழு அமைத்து சிறப்பு காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் வட்டாரத்துக்கு 3 குழுக்கள் வீதம் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவிர, டெங்கு பரவலை கட்டுப்படுத்த வட்டார அளவில் ஒரு குழு வீதம் 12 வட்டார அளவிலான அதிவிரைவு மருத்துவ கண்காணிப்பு குழுக்களும், மாவட்ட அளவிலான ஒரு அதிவிரைவு மருத்துவ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்  அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை.

பருவமழை தீவிரமாகும் போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுக்கள் தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட, வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள அதிவிரைவு மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் ஒரே இடத்தில் அதிக பேருக்கு நோய்த் தொற்று உருவாக வாய்ப்புள்ள பகுதிகளில் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள டயர்கள், செரட்டைகளை அகற்றும் விதமாக அனைத்து ஊராட்சிகளிலும் வாரம்தோறும் வியாழக்கிழமை மெகா தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் டெங்கு, பருவகால காய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe