மங்களூரில் குக்கா் குண்டு எதிரொலி: கோவையில் 1500 காவலர்கள் குவிப்பு- மோப்ப நாயுடன் சோதனை

published 2 years ago

மங்களூரில் குக்கா் குண்டு எதிரொலி: கோவையில் 1500 காவலர்கள் குவிப்பு- மோப்ப நாயுடன் சோதனை

கோவை: கோவையில் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது வீட்டிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள், ஆவணங்கள் மற்றும் விடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 6 போ் கைது செய்யப்பட்டனர். என். ஐ. ஏ குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை பாணியிலேயே கர்நாடக மாநிலம், மங்களூரில் ஆட்டோவில் குக்கா் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களூா் கரோடி பகுதியில் உள்ள உள்வட்டச் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் மர்மப் பொருள் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில், ஆட்டோ ஓட்டுநரும், அதில் சென்ற பயணியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில், ஆட்டோவில் வெடித்தது குக்கா் குண்டு என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி தமிழக   டி. ஜி. பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையிலிருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் வழித்தடத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மங்களூரிலிருந்து கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் நிலையில் கோவை ரெயில் நிலையத்தில் காவல்துறையினர் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மோப்ப நாயுடன், மெட்டல் டிடெக்டா் மூலம் பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe