மூட நம்பிக்கையால் விவசாயிக்குப் பாம்புக்கடி.. வெட்டுப்பட்டது நாக்கு.. மக்களே உஷார்..!

published 2 years ago

மூட நம்பிக்கையால் விவசாயிக்குப் பாம்புக்கடி.. வெட்டுப்பட்டது நாக்கு.. மக்களே உஷார்..!

ஜோதிடத்தை நம்பி  பாம்புக்குப் பரிகாரம் செய்த நபருக்குப் பாம்புக்கடி விழுந்த நிலையில், தவறான முதலுதவி என்ற பெயரில் அவரது நாக்கும் வெட்டப்பட்டது. மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி அவரை உயிர் பிழைக்கச்செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார்.

அந்த ஜோதிடரும்  கோவில் ஒன்றைச் சுட்டிக்காட்டி அங்குள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்த விவசாயி கோவில் பூசாரியிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார். தன்னிடம் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளதாகக் கூறிய பூசாரி, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யக் கூறியுள்ளார்.

இதனை நம்பி விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட, கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாவில் கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாகை வெட்டினார். இதில் ரத்தப்போக்கு அதிகமாகவே அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.

தொடர்ந்து அவர் ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் செந்தில் குமரன் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

இதனிடையே  பாம்புகள் மற்றும் பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் லண்டனில் உள்ள ரெடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி மற்றும் மருத்துவர் செந்தில் குமரன் இணைந்து சுவிச்சர்லாந்தை சேர்ந்த டாக்சின்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில் இது குறித்த கட்டுரையை எழுதியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி கூறுகையில், உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், தமிழகத்தில்  மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை மரணிக்கின்றனர் என்பது தங்கள் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

மேலும், இதனிடையே பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்னென்ன வகையான விஷப்பாம்புகள் உள்ளன? என்பது குறித்துக் கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

பாம்புகள் குறித்த மூட நம்பிக்கையை சமூகத்திலிருந்து களைய வேண்டும் என்பதற்காக டாக்சின்ஸ் ஆராய்ச்சி இதழில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துள்ளதாக சக்திவேல் வையாபுரி தெரிவித்தார்.

நம்ம ஊரு கனெக்‌ஷன் 

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe