கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர் மற்றும் இடைநிலை அலுவலர்களுக்கு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் இயக்குனர்கள் அந்தந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்றுவித்தனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் ஐந்து நாள் பயிற்சியான 'எக்ஸ்டென்சன் நெக்ஸ்ட் - வேளாண் விரிவாக்கத்தில் மாற்றங்களும் புதுமைகளும்' என்ற நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறை அலுவலர்களுக்கு நடந்து வருகிறது.
டிசம்பர் 12 முதல் 16 வரையிலான 5 நாட்கள் நடைபெற்று வரும் இந்நிகழ்வின் நேற்றைய ஒரு பகுதி, ஈஷாவின் மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்டங்களின் செயல்முறையும் செம்மேடு பண்ணையில் பயிற்சியாக வழங்கப்பட்டது.
இதில் காவேரி கூக்குரல் திட்டத்தின் இயக்குனர் ஆனந்த் எத்திராஜுலு பேசுகையில் திட்டத்தின் செயல்பாடுகள், சந்தித்த சவால்கள், நடந்த மாற்றங்கள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினார். "ஆரம்ப கட்டத்தில் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மரங்களை நட்டோம். அதன் உயிர்பிழைப்பு சதவிகிதம் 40 சதவீதத்திற்கும் கீழாக இருந்தது. அதனை கண்டறிந்து மரங்களின் உயிர்வாழ்தல் சதவிகிதம் அதிகரிப்பதற்கு, மரங்களை விவசாயிகளின் நிலங்களில் நட்டோம்.
அது அவர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருந்தது. அப்போது மரங்களின் உயிர்வாழும் சதவிகிதம் ஆச்சர்யப்படும் வகையில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தது.
குறிப்பாக மரம் சார்ந்த விவசாயத்தில், முதலில் பழ மரங்கள், மழை தரும் மரங்கள், மூலிகைகள் என துவங்கி விவசாயிகளுக்கு நல்ல விலை வருகின்ற வகையிலான டிம்பர் மரங்களின் தேவை இருப்பதை அனுபவத்தில் கண்டறிந்தோம்.
அதன் பிறகு 2009-ல் தேக்கு, செம்மரம், மகோகனி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க டிம்பர் வகை மரங்களை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த மானிய விலையான 3 ரூபாயில் வழங்கினோம்.
இந்த டிம்பர் மதிப்பு மரங்கள் குறைந்த காலம் முதல் நீண்ட காலம் வரையிலான நிதி காப்பீடாக இருக்கும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தோம். மேலும் கடந்த 15 வருடங்களாக இந்த மரம் சார்ந்த விவசாயத்தில் சாதித்த விவசாயிகளின் வழிகாட்டுதல்கள், பகிர்தல்களை பயிற்சி நிகழ்வுகளின் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.
இப்போது ஒவ்வொரு வருடமும் 14,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 2500 விவசாயிகள் முழுவதுமாக மரம் சார்ந்த இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.
இது அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருந்தும்படியான வேளாண்மை என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.
ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் திட்ட இயக்குனர் வெங்கட்ராசா பேசுகையில், "தற்போது மத்திய துறை திட்டம் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவங்க உள்ளதாக அறிவித்து, வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாதிரி நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த 3 நாள் பங்குதாரர்கள் மாநாட்டில், ஈஷா அவுட்ரீச்-ன் திட்ட மாதிரி அமைச்சகம் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு அது இந்தியா முழுவதும் பரிந்துரைக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெரும் நிறுவனங்களுக்கே இத்தகைய உடன்படிக்கைக்கு வருவது என்பது சிக்கலானதாக இருக்கும்போது, அமைப்புசாரா துறையான விவசாயத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இதனை கொண்டு செல்வது சவாலான இலக்காக இருந்தது. சத்குருவின் வழிகாட்டுதலில் 'வெள்ளியங்கிரி உழவன்' நிறுவனம் துவங்கி முதலில் நிறுவனத்தின் குழு உருவாக்கப்பட்டு, பரிவர்த்தனை துவங்கியது. விவசாயிகளை தங்களுக்கு மட்டுமே சிந்திப்பதிலிருந்து அனைவருக்குமான தீர்வுகளை சிந்திக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்து வேளாண் துறை அமைச்சகத்தோடு இணைந்து மேலும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்க உள்ளோம்" என்றார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மண் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்கக தலைவர் பேராசிரியர் ஆனந்தராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!