பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு 616 ரூபாய் அதிரடி உயர்வு

published 2 years ago

பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு 616 ரூபாய் அதிரடி உயர்வு

கோவை: தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையைக் கடந்திருந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் எனக் கருதியதால், தங்கத்தைப் பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது.

நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இதன் தாக்கம் உடனடியாக தங்கத்தின் விலையில் எதிரொலித்ததைப் பார்க்க முடிந்தது. காலையில் கிராமுக்கு ரூ.22-ம், பவுனுக்கு ரூ.176-ம் உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்து இருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 338-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 704-க்கும் விற்பனை ஆன தங்கம் விலை, நேற்று மாலை கிராமுக்கு ரூ.77-ம், பவுனுக்கு ரூ.616-ம் அதிரடியாக உயர்ந்தது.

இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 415-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் தங்கம் விற்பனை ஆனதுதான் வரலாறு காணாத புதிய உச்சமாகப் பார்க்கப்பட்டது.

அந்தவகையில் நேற்றைய தங்க விலை வரலாறு காணாத உச்சத்தை நெருங்கி இருக்கிறது. இன்றோ (வியாழக்கிழமை), நாளையோ (வெள்ளிக்கிழமை) விலை அதிகரிக்கும் பட்சத்தில், தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தைப் பதிவு செய்யும்.

தங்க விலை உயர்வு குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, "மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.

இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்" என்றார்.

தங்க விலையைப் போல, வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசும், கிலோவுக்கு ரூ.300-ம் அதிகரித்து, ஒரு கிராம் 74 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe