அடிப்படை வசதி இல்லாமல் காணப்படும் குறிச்சி மேல்நிலைப்பள்ளி

published 2 years ago

அடிப்படை வசதி இல்லாமல் காணப்படும் குறிச்சி மேல்நிலைப்பள்ளி

கோவை: கோவை சுந்தராபுரம் அருகே மாச்சம்பாளையத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாகக் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த வித அடிப்படை வசதியும் தமிழக அரசு செய்து தரவில்லை என இப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதுகுறித்து இப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறியதாவது:- 
"இந்த பள்ளியில் 2 கட்டிடங்கள் செயல்படாமல் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவை பராமரிக்காமல் பூட்டிய நிலையில் உள்ளது. பள்ளிக்குச் சைக்கிளில் வரும் மாணவர்கள் சைக்கிளை நிறுத்துவதற்கு ஸ்டாண்ட் உள்ளது. ஆனால் அதுவும் பராமரிக்காமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. 

மேலும் பள்ளியின் முன்புறம் பிரமாண்டமான விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் அதில் விளையாட முடியாமல் ஆங்காங்கே மண் குவியல்கள் குவிந்த நிலையில் உள்ளது. பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் குடிமகன்கள் உள்ளே புகுந்து குடித்து விட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டுச் செல்கின்றனர். இது தவிர இரவு நேரங்களில் சீட்டாட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து பள்ளியின் அலுவலக கதவை உடைத்து கணிப்பொறிகளைத் திருடிச் சென்றனர். இது ஏற்கனவே குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இந்த பள்ளி இருப்பதால் எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது. குறிச்சி குளக்கரை அருகே பள்ளி அமைந்துள்ளதால் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இங்கு அதிகமாகவே இருக்கும். எனவே பள்ளிக்கு இரவு நேரக் காவலாளி கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

இது தவிர காவல்துறையினர் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து வந்தால் ஒரு சில அசம்பாவித சூழ்நிலைகளைத் தடுக்க முடியும். எனவே தமிழக அரசு இதனைக் கவனத்தில் கொண்டு உடனே காம்பவுண்ட் சுவர் வசதி மற்றும் இரவு நேரக் காவலாளி பணியில் அமர்த்தல் ஆகிய வசதிகளை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே கல்வியின் புனிதம் பாதுகாக்கப்படும்.

இத்தகைய அவல நிலையைக் கண்டு, சுந்தராபுரத்தில் பல்வேறு அமைப்புகள் 'குறிச்சிப் பள்ளியைப் பாதுகாப்போம்' என்று பகுதி முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe