கொலையாளிகளை சுட்டுப் பிடித்தது கோவை போலீஸ்..!

published 2 years ago

கொலையாளிகளை சுட்டுப் பிடித்தது கோவை போலீஸ்..!

 

கோவை:

கோவை நீதிமன்றம் அருகே நேற்று பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.


இந்நிலையில் கொலை குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலகிரியில் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வரும் வழியில், கெளதம், ஜோஸ்வா ஆகியோர் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காவல் துறையினரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

நேற்று கோகுல் கொலை செய்யப்பட்ட வழக்கில், உடனிருந்த மனோஜ் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றவாளிகள்  நீலகிரி மாவட்டம் குன்னூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை காவல் துறையினர் தேடிச் சென்ற போது தப்பித்து சென்றனர்.

ஊட்டியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்த இடங்களில் சோதனை செய்தனர்.


அவர்கள் கோத்தகிரியை நோக்கி 4 பைக்குகளில் சென்று கொண்டு கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

ஊட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்த போது, கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது மேட்டுப்பாளையம் வன கல்லூரி முன்பாக கெளதம், ஜோஸ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றுதல் ஏற்படுவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென வற்புறுத்தி வாகனத்தை நிறுத்தினர்.

பின்னர் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். காவலர்கள் அவர்களை விரட்டும் போது ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஒரு காவலரை தாக்கியதில் காயம் ஏற்பட்டது.
காவல் துறையினர் எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக இருவரையும் காலில் துப்பாக்கியால் எஸ்.ஐ. சுட்டுள்ளார். இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர் எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe