அவிநாசி ரோட்டில் 5 சுரங்கப்பாதை; 10 நாட்களில் இடம் தேர்வு! அறிக்கை அளிக்க கமிட்டிக்கு கலெக்டர் உத்தரவு

published 1 year ago

அவிநாசி ரோட்டில் 5 சுரங்கப்பாதை; 10 நாட்களில் இடம் தேர்வு! அறிக்கை அளிக்க கமிட்டிக்கு கலெக்டர் உத்தரவு

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் எந்தெந்த இடங்களில் சுரங்க நடைபாதை; உயர்மட்ட நடைபாதை அமைப்பது; மையத்தடுப்புக்கு இடையே வாகனங்கள் செல்ல இடைவெளி விடுவது தொடர்பாக முடிவெடுக்க, கமிட்டி அமைக்கப்படவுள்ளது.


கோவை, அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு, ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் (திட்டம்), மேம்பாலம் கட்டப்படுகிறது. இது, 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது. 'பாக்ஸ்' வடிவ 'கர்டர்' தயாரிக்கப்பட்டு, 'செக்மென்ட்' தொழில்நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது.

மேலும், பத்தரை மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், சர்வீஸ் ரோடும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகாலுடன் நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய ஐந்து பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும். இதேபோல், உயர்மட்ட நடைபாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்கப்பட்டது.

மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தாலும், ரோட்டிலும் போக்குவரத்து சிரமம் வரக்கூடாது; பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில், சுரங்க நடைபாதை அமையும் இடங்களை தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதற்காக கமிட்டி அமைக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநில நெடுஞ்சாலைத்துறை (சிறப்பு திட்டம்) கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி தலைமையிலான இந்த கமிட்டியில், நெடுஞ்சாலைத்துறை (சாலை பாதுகாப்பு) கோட்ட பொறியாளர் மனுநீதி, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், மாநகராட்சி உதவி கமிஷனர் ஒருவர், ஆர்.டி.ஓ., அரசு போக்குவரத்து கழக அதிகாரி, மக்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க, சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் கதிர்மதியோன் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவினர் கள ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை பாலத்தின் துாண்களுக்கு இடையே மையத்தடுப்பு கட்டுவதற்கு முன், எந்தெந்த இடங்களில், வாகன போக்குவரத்துக்கு இடைவெளி விட வேண்டும் என்பதும் முடிவு செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே இருந்த பகுதிகளில் மீண்டும் விட வேண்டுமா; தேவையில்லாத இடங்களை அடைக்கலாமா; புதிதாக வேறு இடங்களில் இடைவெளி கொடுக்க வேண்டுமா என்பதையும் இக்குழு பரிந்துரைக்கும்.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுரங்க நடைபாதை, உயர்மட்ட நடைபாதை அமைக்க, ஏற்கனவே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதிகமான மக்கள் ரோட்டைக் கடக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு, சுரங்க நடைபாதை அமையும் சில இடங்களை மாற்றியமைக்கலாம் எனக் கூறுவதால், கமிட்டி கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்' என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe