ஒருவரது பாலினத்தை வைத்து அவரை பொருட்படுத்தாமல், அவரை ஒரு தனிநபராகப் பார்க்கும் இடமே உண்மையான சமத்துவம் என்பதுடன் துவங்குகிறது இந்த கட்டுரை.
நாம் இப்போது 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம். கடந்த கால தடைகளிலிருந்து விலகி, இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனின் பங்கும் மாறிவிட்டது. பெண்கள் தங்கள் வீட்டின் நான்கு சுவர்களில் இருந்து வெளியேறி, சமூகத்தில் அமைக்கப்பட்ட பாலினம் சார்ந்த எண்ணங்களை உடைத்து, உலகத்தின் வளர்ச்சியுடன் ஒத்து முன்னேறி வருகின்றனர்.
உதாரணமாக இந்திரா நூயி, சாய்னா நேவால், மேரி கோம், பி.வி.சிந்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண்கள், ஆண்களுடன் தோளோடு தோள் நிற்பது மட்டுமின்றி, பலமுறை அவர்களை விஞ்சவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
பெண்களின் அதிகாரம் மற்றும் சமத்துவம் பற்றிய விவாதங்கள் காரணமாக இன்று உலக நாடுகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொள்கின்றன. பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை உருவாக்குவது ஒரு பந்தயம் போல் உருவெடுத்துள்ளது.
பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவது நாட்டின் வளர்ச்சியின் ஒரு பங்கு என்று உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா உட்பட பல நாடுகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன. இத்தகைய மாற்றத்தை தான் பாலின நடுநிலை (Gender Neutrality) என்கின்றனர்.
தனிநபரின் பாலினம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் ஒருவரிடையே ஏற்படும் பாகுபாட்டைத் தவிர்ப்பதே பாலின நடுநிலை.
செக்ஸ் (Sex) என்பது ஒரு நபரின் உயிரியல் மற்றும் உடலியல் பண்புகளைக் குறிக்கிறது. ஒரு நபரின் பாலினத்தை குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமூகம் ஒரு ஆண் இப்படி தான் இருப்பான், ஒரு பெண் இப்படி தான் இருப்பாள் என்று பாலினத்தை (Gender) வகைப்படுத்தி காட்டியுள்ளது. இந்த பாலினத்திற்குள் ஒருவரது நடத்தை, செயல்பாடுகள் மற்றும் பண்புகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Gender equality எனப்படும் பாலின சமத்துவம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சமத்துவம் என்ற பெயரில் ஆண் பெண் இடையே நடவடிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இந்த மனநிலையை மாற்றுவது இன்னும் பெரிய சவாலாக கருதப்படுகிறது.
உதாரணமாக, நமது அலுவலகத்தில் ஒரே எண்ணிக்கையிலான ஆண்கள் மற்றும் பெண்களை பணியமர்த்துவது பாலின சமத்துவம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சிறந்த நபரை வேலைக்கு அமர்த்துவது பாலின நடுநிலை.
பெண்களின் முன்னேற்றம் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் சமமாக இல்லை என்பதும், இன்று வரையிலும் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன என்பதும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த சமூகத் தீமைகளை வேரோடு அழிப்பது, பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, நாட்டின் அரசியல் மற்றும் சமூக கொள்கைகளை மறுவடிவமைக்க வேண்டியது ஆகியவை இப்போதைய தலையாய தேவைகளாக உள்ளன.
பாலின சமத்துவத்துவம் மற்றும் பாலின நடுநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ற சட்டங்களை வகுப்பது இந்தியாவிற்கான புதிய சவாலாகும். ஒரு குறிப்பிட்ட பாலினத்தைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் எதிர் பாலினத்தை பாதிக்கும் கொடிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
பாலின சமத்துவ சட்டங்கள் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கின்றன எனும் நிலையில் பாலின-நடுநிலைச் சட்டங்களை உருவாக்கி பாலினத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இன்றைய காலத்தில் அத்தியாவசியமான தேவையாக உள்ளது.
இந்த மாற்றமானது சட்ட அளவில் மட்டும் அல்லாமல் வழக்கிலும் மாறுதல்களை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவன் (He), அவள் (She) போன்ற பாலினம் சார்ந்த சொற்களைத் தாண்டி அவர்கள் (They, them) என்ற வார்த்தை சமூக வலைதளத்தில் இப்போது பிரபலமாகி வருவது இதற்கு எடுத்துக்காட்டாகும்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!