காதலனை கரம் பிடிக்க மூதாட்டியை கொலை செய்த சிறுமி : கோவையில் பரபரப்பு

published now

காதலனை கரம் பிடிக்க மூதாட்டியை கொலை செய்த சிறுமி : கோவையில் பரபரப்பு

கோவை: கோவை அருகே காதலனை கரம் பிடிக்க 
மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த 
சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி எஸ்.வி. நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம். சொந்தமாக பஸ் வைத்து இயக்கி வந்தார்.

இவரது மனைவி நாகலட்சுமி(76 வயது). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சதாசிவம் இறந்ததும் நாகலட்சுமி அவரது மகன் செந்தில்வேல் உடன் வசித்து வந்தார்.


இந்நிலையில் செந்தில்வேல் காலை உணவு சாப்பிட வீட்டிலிருந்து சுமார் 10:30 மணிக்கு வெளியே சென்றுள்ளார்.

சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சோபாவில் நாகலட்சுமி இறந்துகிடந்தார்.

அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் தனது சகோதரிக்கு தகவல் கொடுத்தார்.  செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நாகலட்சுமி அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகைகளை திருடி போனது தெரியவந்தது.

உடனடியாக செந்தில்வேல் போலீசுக்கு தகவல் கொடுத்தார். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு போலீசார் ஆய்வு செய்ததில் நகைக்காக நாகலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார் நாகலட்சுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.


இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

எஸ்.வி. நாயுடு வீதியில்  வசிக்கும் 17 வயது சிறுமி வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த வாலிபரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தார்.  

இந்நிலையில்தான் நன்கு பழகிய எதிர்வீட்டில் நாகலட்சுமி ஏராளமான நகைகளை அணிந்து வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து சிறுமி அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

நாகலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது நகைகளையும் எடுத்துள்ளார்.


நாகலட்சுமியின் மகன் செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்த போது அந்த சிறுமி சோபா அருகிலேயே ஒளிந்து இருந்திருக்கிறார்.

இவர்களைப் பார்த்ததும், பாட்டி கை-கால்களை இழுத்துக் கொண்டு துடித்ததைப் பார்த்து வீட்டிற்குள் வந்தேன் என்று கூறியவரே அங்கிருந்து நைசாக நழுவி விட்டார்.
நாகலட்சுமி இறந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை துவக்கினோம். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தோம். அதில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் எதிர்வீட்டு இளம்பெண் மட்டுமே நாகலட்சுமியின் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது. 

முதலில் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தோம். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.  சந்தேகம் வலுத்ததும் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தோம். 

அதில் அவர் நாகலட்சுமியை கழுத்தை நெறித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் ஆடைக்குள் ஒளித்து வைத்திருந்த சுமார் 20 போன் நகைகளையும் பறிமுதல் செய்தோம்.  

நாகலட்சுமியின் பிரேதம் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுமியை கைது செய்ததோடு அவரது காதலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலனை கரம் பிடிக்க சிறுமி ஒருவர் மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe