கோவை மாநகரில் குப்பைகளை அகற்ற ரூ.170 கோடி

published 1 year ago

கோவை மாநகரில் குப்பைகளை அகற்ற ரூ.170 கோடி

கோவை : கோவை மாநகர பகுதியில் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்த ரூ.170 கோடியில் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் 100 வார்டு பகுதியில் உள்ள அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகள் தவிர்த்து, சில பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தற்போது பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரைப் பெற்று மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இப்பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வருவாய் அல்லாத குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

ஆகையால் பொது குழாய்கள் மற்றும் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரைப் பெருமளவு குறைக்க இப்பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்பு தாரர்களுக்கு வீட்டு இணைப்புகள் வழங்கினால் இதனால் பெறப்படும் குடிநீர் கட்டணத்தொகை மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். எனவே கோவை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்பிருந்த பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புரனமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகை விலக்கு அளிக்கப்பட்டு, குறைந்தபட்ச சேவை கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் வீட்டுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கலாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக் கீழ் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண் சாலைகளைத் தார்ச் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ. 13.75 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு சாலைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களின் நலன் கருதி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 62,63,66,67,68,69,70,80 மற்றும் 83 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளின் வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மரணம் அடையும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்வதற்கென்று ஒரு பொதுவான இஸ்லாமிய அடக்கஸ்தலம் இதுவரையிலும் இல்லை.

எனவே இப்பகுதியில் மரணம் அடைபவர்களை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பொது அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடி மற்றும் மரணித்தவர்கள் உடலைக் கொண்டு செல்வது சிரமம் போன்ற சூழ்நிலை காரணமாக 86வது வார்டுக்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான காலியிடங்களில் இஸ்லாமியர்களுக்கு பொது அடக்கஸ்தலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கோவை மாநகரில் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படுவதாலும், பொதுமக்கள் மட்டும் பொதுச் சுகாதார நலன் கருதி திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளைச் செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குநர் கடிதத்தில் குறிப்பிட்டபட்டது போல் உத்தரவுகள் இப்பணிக்காக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முந்தைய கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு மேயரால் முன் அனுமதி பெறப்பட்டுப் பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.170 கோடி தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் பேசுகையில், ‘‘மாநகராட்சி பள்ளிகளில் கண்டிப்பாகத் தினமும் காலை மற்றும் மதியம் என இரண்டு முறை குடிநீர் விநியோகம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பொது குழாய்கள் அகற்றப்படாது. தெரு விளக்குகள் பராமரிப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும்’’ என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe