ஆடிப்பெருக்கு : பேரூரில் நம்பிக்கையுடன் வழிபாடு நடத்திய கோவை மக்கள் | புகைப்படத் தொகுப்பு

published 1 year ago

ஆடிப்பெருக்கு : பேரூரில் நம்பிக்கையுடன் வழிபாடு நடத்திய கோவை மக்கள் | புகைப்படத் தொகுப்பு

அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு தினம்.

தென்மேற்கு பருவமழையானது ஆடி மாத காலகட்டத்தில் வலுவடையும். இந்த காலத்தில் பெய்யும் கனமழை மூலமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதையே ஆடிப்பெருக்கு என்பார்கள். ஆடிப்பெருக்கு ஆடி மாதம் வரும் 18ம் தேதி நாளில் கடைபிடிக்கப்படுகிறது.

"ஆடிப்பட்டம் தேடி விதை" என்று ஒரு கூற்று உண்டு, விதை விதைப்பதற்கு ஏற்ற காலகட்டம் இது. இந்த காலகட்டத்தில் நெல், கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் விதைப்பார்கள். தொடர்ந்து அவற்றை தை மாதம் அறுவடை செய்வார்கள்.

ஆடிப்பெருக்கில் ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவாரகள், புதுமணத் தம்பதிகள் தாலி மாற்றிக் கொள்ளவும் நிகழ்வும் நடைபெறும். வாழை இலையில் பூக்கள், பச்சரிசி,  குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு, தேங்காய், பச்சரிசி மாவு, பன்னீர், தேன் ஆகியன கொண்டு ஆற்றுக்கும், முன்னோர்களுக்கும் படையலிட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் பித்ருசாபம் விலகும் என்பது ஐதீகம்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஆடிப்பெருக்கு நாளில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள   நொய்யல் ஆற்றங்கரையில் வழிபாடு நடைபெறும். அதன்படி, இன்று அதிகாலை முதலே பேரூர் படித்துறையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

 

பின்னர் அவர்கள் ஆற்றுப்பகுதியில் குவிந்தனர். நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களை வழங்கினர்.

இதேபோல் புதுமண தம்பதிகள் தாலியை மாற்றிக் கொண்டனர். இதேபோல் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆற்றில் புனிதநீராடிவிட்டு பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe