கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர் பற்றித் திடுக்கிடும் தகவல்

published 1 year ago

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர் பற்றித்  திடுக்கிடும் தகவல்

கோவை : கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஜமேஷா முபின் உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. 

என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 11 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, சமீபத்தில் என்.ஐ.ஏ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் (வயது 25) கைது செய்யப்பட்டார்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினின் நெருங்கிய கூட்டாளியாகவும், அவரது வலது கரமாகவும் முகமது இத்ரிஸ் செயல்பட்டது தெரியவந்தது. மேலும் இவர் இந்து கோவில்களைத் தகர்ப்பது, இந்து தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. 

அவரை கைது செய்தபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் இருந்து கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பல முக்கிய தகவல்களைத் திரட்டி உள்ளனர். மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இவரைக் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான முகமது இத்ரிஸ் கேரளாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற தகவல் தெரியவந்துள்ளது. முகமது இத்ரிஸ் செல்போனை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில செல்போன் எண்கள் இருந்தன. அது யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஜமேஷா முபின் தலைமையில் முகமது இத்ரிஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கேரளாவில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளனர். 

வெடிகுண்டு தயாரிப்பதில் முகமது இத்ரிஸ் திறமைசாலியாக இருந்துள்ளார். குறுகிய நேரத்தில் வெடிகுண்டைத் தயாரித்துக் காட்டி அங்கிருந்தவர்களிடம் பாராட்டினை பெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் அவரது செல்போனில் உள்ளது. மேலும் அவர்களுக்குப் பலர் நிதியுதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

அது தொடர்பான தகவல்களையும் கைப்பற்றியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர். மேலும் முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் சிலரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்களிடம் ஏதாவது தெரிவித்தாரா? என்பதை அறிய அவருடன் பேசியவர்கள் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களைத் தேடும் பணியையும் தொடங்கி உள்ளனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe