நம்மில் பலர் காதலை ஒரு மாயாஜால சக்தியாகவே நினைக்கிறோம். அதன் வெளிப்பாடாகத் தான் ஒருவரை காணும் போது ஒரு வகையான அலாதி இன்பத்தை நாம் உணர்கிறோம். (பெல் அடிப்பது, பல்பு எரிவது போன்ற பேச்சு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்).
காதலில் நம் சக்திக்கு அப்பாற்பட்டு நம்மை ஏதோ ஒன்று ஆட்கொள்வதாகவும், அதனால் நம் மனதுக்குப் பிடித்த ஒருவர் மீது உருகி உருகி காதல் கொள்வதாகவும் நாம் நினைக்கிறோம். உண்மையில் இதனையே நம் மனது விரும்புகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நமது துணையைப் பற்றி கனவு காண்பது, அவரை நினைத்து தனியாக சிரிப்பது போன்றவற்றை நாம் ரசித்து மகிழ்கிறோம்.இப்படிப்பட்ட நமது கனவு மண்டலங்களைத் தகர்த்து எரியத்தான் போகிறது இந்த பதிவு...
இன்றும் திரைப்படங்களில் வந்த பல அழகான காதல் காட்சிகள் நமக்கு நினைவிருக்கும். காதலுக்கான உயிரியல் விளக்கத்தின் மூலம் அந்த காட்சிகளின் மீது தான் 'கோல்' அடிக்கப் போகிறது இந்த கட்டுரை.
"என் காதலையா இப்படி அசிங்கபடுத்துற" என்று பேசும் பலருக்கும், "இத்தனை நாள் நல்லா தாங்க இருந்துச்சு, கொஞ்ச நாளாகத்தான் எங்களுக்குள்ள ஏதோ ஒரு விரிசல்" என்று அப்படினு புலம்புவோருக்கும் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்ற அறிவியல் பூர்வ விளக்கத்தைப் பார்க்கலாம்.நம் மூளையில் இருக்கும் 'நியூரான்கள்' என சொல்லப்படும் உயிரணுக்கள் மற்றும் 'நியூரோ-டிரான்ஸ்மிட்டெர்கள்' என சொல்லப்படும் அமிலங்கள் நமக்குள் ஏற்படும் 'காதல்' போன்ற பல்வேறு உணர்வை ஏற்படுத்துகிறது.
நம் மூளையில் சுரக்கும் அமிலங்களின் அளவைப் பொருத்து அந்த உணர்வு வளர்கின்றது, அல்லது அழிகின்றது. இதுவே அறிவியல் காதலைப் பற்றிக் கூறும் விளக்கம். இந்த உயிரியல் செயல்பாடுகள் தான் நமக்கு காதலை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.அன்பின் உயிரியல் விளக்கம்
குழந்தைப் பருவத்தில் நமது பெற்றோர், உறவினர்களுடன் அனுபவித்தவையே நாம் அனைவருக்கும் உருவான முதல் உணர்ச்சிப் பிணைப்பு. குழந்தைப் பருவத்தில் இந்த உறவுகள் இல்லாமல் யாராலும் வாழ முடியாது.
இந்த முதல் இணைப்பு என்பது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் மட்டும் இருப்பதில்லை. இந்த இணைப்பு என்னும் உணர்வு நாம் வளரும் பொழுது நட்பு மற்றும் காதலாக உருவெடுக்கிறது. நம் பருவ ஆண்டுகளில் அதிகமாகச் சுரக்கும் சில அமிலங்கள் நமக்கு காதல் என்ற உணர்வு மிகுதியை ஏற்படுத்துவதுடன், "நாம் அந்த ஒருவர் இல்லாமல் வாழ முடியாது" என்ற மாய உணர்வையும் உருவாக்குகிறது.
இப்படிப்பட்ட மாயையை ஏற்படுத்தும் அமிலங்கள் 'ஆக்ஸிடாஸின்' மற்றும் 'வாசோபிரசின்' என்பவை ஆகும். தாய்ப்பாலூட்டும் போதும், அதீத காதல் கொண்டிருக்கும் போது "உனக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்... வானில் பறப்பேன்" என்றெல்லாம் உணரும் பல உச்சக்கட்ட அனுபவங்களின் போதும் மனித உடல் 'ஆக்ஸிடாசினை' சுரக்கிறது. அது மட்டுமின்றி 'வாசோபிரசின்' என்ற அமிலம் உடலுறவுக்குப் பிறகு சுரக்கிறது. இது நமது துணையின் மீது பற்றுதல் உணர்வை உருவாக்குகிறது. அதனால் தான், ஒரு தம்பதியினர் எவ்வளவு அதிகமாக உடலுறவு கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களது பிணைப்பு வலுவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அன்பு மற்றும் காதலைப் பற்றிய இத்தகைய அறிவியல் விளக்கங்கள் சிலருக்கு அவர்களது உற்சாகத்தை அழிக்கலாம். நாம் அன்பு செலுத்தும் போதும், காதலிக்கும் போதும் நம் உடல் மற்றும் மனதில் என்ன நடக்கும் என்பதை சிலர் நன்கு புரிந்து கொள்ளலாம். புரிதலுக்கு பிறகு இந்த உணர்வு கலவரங்களை எப்படி கையாள்வது என்ற புரிதலை ஏற்படுத்தவும் உதவலாம்.
இதில் நாம் அதிக அதிர்ச்சி ஆக வேண்டிய உண்மை என்னவென்றால் நாம் ஒருவரைப் பற்றி அதிகமாக சிந்திக்கும் பொழுதும் நமது உடலில் இந்த அமிலங்கள் சுரந்து நாம் அவரை விரும்புவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.. ஒரு வித மனப் பிராந்தி என்று கூறுவதைப் போலத்தான்.உதாரணத்திற்கு பள்ளிப்பருவத்தில் நம்மை இன்னொரு நபருடன் வைத்து நண்பர்கள் கிண்டலடிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த நபர் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கக் காரணம் இது தான். நாம் அவரை பற்றி சிந்திக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட விளைவே இது.
இனி உங்க காதல் பயணமும்.. காதலால் ஏற்பட்ட காயங்கள் என்று நினைப்பவற்றை கையாள்வதும் உங்கள் கையில் தானுங்க இருக்கு... இந்த அறிவியல் புரிதலைக் கொண்டு நீங்கள் யாரைப்பற்றி அதிகம் நினைக்க வேண்டும்..? யாரைப் பற்றி நினைக்கக் கூடாது? அல்லது குறைவாக நினைவில் வெச்சிக்கனும்? என்று முடிவு பன்னிக்கோங்க..
அனைவரும் இன்புற்றிருக்கவே உலகம். வாழ்வின் கசப்பான அனுபவங்களை மறந்து, காதலால் ஏற்பட்ட கவலைகளை துறந்து அன்பை மட்டும் கொண்டிருப்போம்.
ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் லவ் லைஃப் மக்களே...!
-நியூஸ் க்ளவுட்ஸ் குழு