LT, LTCT நூற்பாலைகளுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்- சைமா புதிய நிர்வாகிகள் கோரிக்கை…

published 1 year ago

LT, LTCT நூற்பாலைகளுக்கு உச்சபட்ச  பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்- சைமா புதிய நிர்வாகிகள் கோரிக்கை…

கோவை: LT, LTCT நூற்பாலைகளுக்கு உச்சபட்ச  பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என சைமா புதிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(சைமா) 64-வது ஆண்டு பொதுக்குழு கோவையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக தலைவர் மருத்துவர்.சுந்தரராமன், துணை தலைவர்களாக துரை பழனிசாமி, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் பேல் பருத்தி விளைச்சல் செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்தாண்டு 9 லட்சம் பேல்களாக பருத்தி விளைச்சல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.


விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் பருத்தி மீதான இறக்குமதி வரி 11 சதவீதத்தை மத்திய அரசு நீக்க மறுக்கிறது என கூறிய அவர் மிக நீண்ட இழை ரகத்தை சேர்ந்த பருத்திக்காவது இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என சங்கம் சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றனர். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் காற்றாலைகள், மேற்கூரை சூரியஒளி மின்சக்திக்கான நெட்வொர்க் கட்டணங்களை நீக்கி, உயர்அழுத்த(எச்டி) நூற்பாலைகளுக்கு அதிகபட்ச மின்கட்டணத்தை 562 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக குறைக்க வேண்டும் என கூறினர். மேலும் அதிகபட்ச கேட்பு கட்டணங்கள் மற்றும் உச்சபட்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை எல்டி மற்றும் எல்டிசிடி நூற்பாலைகளுக்கு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசு மின்துறை தொடர்பான மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும்
நூற்பாலைகள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையே சார்ந்திருப்பதால் தற்போதைய நிலையை தக்க வைத்து கொள்ளவும், சம நிலைபாட்டை உறுதிப்படுத்தவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

அனைத்து மூலப்பொருட்கள் மீதும், குறிப்பாக பாலியஸ்டர் பஞ்சு மற்றும் விஸ்கோஸ் பஞ்சு போன்ற செயற்கை பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள குவிப்பு வரிகளை நீக்க பிரதமர் மோடி மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது என தெரிவித்த அவர்கள் இருப்பினும் புதிய தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் காரணமாக செயற்கை இழைகள் மற்றும் இழை நூல்களின் சீரான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்றனர். அட்வான்ஸ் ஆத்தரைஷேசன் திட்டத்தின்கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விஸ்கோஸ் பஞ்சு மற்றும் நாட்டில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து சிறப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை இழைகள் மற்றும் இழை நூல்களுக்கு உடனடியாக விலக்கு அளிக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர். 

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 15 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பருத்தி விளைச்சலை அதிகரிக்க மத்திய அரசு 44.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது எனவும் நடப்பு பருத்தி சீசனில் பருத்தி கையிருப்பு போதுமான அளவு உள்ளது என கூறிய அவர்கள், 
எதிர்வரும் சீசனிலும் 350 லட்சம் பேல்களுக்கு மேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என்பதால் ஜவுளித்தொழில் நிலையான வளர்ச்சி பெறும் என நம்புவதாக தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe