கோவை மாநகராட்சிக்கு புதிய ஆணையர்... யார் இந்த சிவகுரு பிரபாகரன்

published 1 year ago

கோவை மாநகராட்சிக்கு புதிய ஆணையர்... யார் இந்த சிவகுரு பிரபாகரன்

கோவை: கோவை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் பிரதாப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்த சிவகுரு பிரபாகரன் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஓட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவரது மகன் சிவகுரு பிரபாகரன். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனது 4வது முயற்சியில் தேர்ச்சி பெற்ற சிவகுரு பிரபாகரன் தமிழக அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். தொடர்ந்து இவர் உத்தரகண்ட் மாநிலத்தில் பயிற்சி முடித்து நெல்லை மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றினார்.

சிவகுரு பிரபாகரன் ஏற்கனவே தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி சொந்த ஊரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். மேலும், ஒரு மருத்துவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த நிலையில் ஒரு 'கண்டிஷன்' போட்டுள்ளார்.

தான் பிறந்து வளர்ந்த ஓட்டங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது தான் அந்த 'கண்டிஷன்'. சிவகுரு பிரபாகரனின் இந்த பொறுப்புணர்வுடன் கூடிய இந்த நிபந்தனையை ஏற்று தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த எம்பிபிஎஸ் பட்டதாரியான கிருஷ்ணபாரதி இவரை திருமணம் செய்தார்.

அரசு அதிகாரி என்றதும் பகட்டு காட்டாமல், களத்தில் இறங்கி மக்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட இந்த சிவகுரு பிரபாகரன் தற்போது இவர் சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு பதவி உயர்வு அளித்து கோவை மாநகராட்சியின் ஆணையராக நியமித்துள்ளது தமிழக அரசு. இன்னும் ஒரு சில தினங்களில் இவர் கோவை வந்து மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்க இருக்கும் சிவகுரு பிரபாகரனின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe