திமுகவினர் மக்களுக்காக பணி செய்யாமல் அவர்கள் சார்ந்த நிறுவனங்களை வளப்படுத்துவதற்காக வேலை செய்துள்ளனர்- எல்.முருகன் விமர்சனம்...

published 1 year ago

திமுகவினர் மக்களுக்காக பணி செய்யாமல் அவர்கள் சார்ந்த நிறுவனங்களை வளப்படுத்துவதற்காக வேலை செய்துள்ளனர்- எல்.முருகன் விமர்சனம்...

கோவை: தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தின் பட்டத்து இளவரசர்களின் சினிமா கம்பெனிகள் மட்டுமே சினிமாவை எடுக்க வேண்டும், அவர்கள் படங்கள் மட்டுமே சினிமாவில் திரையிட வேண்டும் என்கிற தவறான எண்ணத்தோடு செயல்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் 'என் மண், என் மக்கள்' யாத்திரையில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் இருந்து விமான மூலம் இன்று கோவை வந்தடைந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது,

'நேற்று தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது. இதில் நமது கோவையைச் சேர்ந்த 'Media Ventures' நிறுவனத்தினரின் 'சிற்பிகளின் சித்திரம்' எனும் குறும்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆசிரியர் எப்படி கல்வி பணியையும்தாண்டி மாணவர்களை உருவாக்குகிறார் என்கிறது அந்த கதை. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் தமிழகத்தினுடைய மற்றொரு சிறந்த படமான 'கடைசி விவசாயி'க்கு தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களின் குறும்படத்திற்கு சிறந்த இசையமைப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நடன இயக்குனர் கலா மற்றும் வசந்த் சாய் ஆகியோர் இதில் நடுவர்களாக இருந்தனர். தமிழகத்திலிருந்து நேற்று ஐந்து பேர் விருது பெற்றுள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து 286 பேர் கொண்ட பயணிகள் நேற்று இந்தியா வந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் போர் முனைகளிலிருந்து பத்திரமாக வெளிவந்துள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதுவரை 1150 பேர் 5 விமானங்களில் இஸ்ரேலில் இருந்து இந்தியாவிற்கு மீட்கப்பட்டுள்ளனர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத தேசத்தை சார்ந்தவர்கள் எங்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறார். உக்கரைனில் இருந்து 23 ஆயிரம் மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தில் அழைத்து வந்தோம். ஆப்ரேஷன் காவிரியில் சூடானிலிருந்து அழைத்து வந்தோம். இப்போது ஆபரேஷன் அஜய் மூலமாக இஸ்ரேலில் இருந்து வர விரும்புவர்களை கூட்டி வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று 'என் மண் என் மக்கள்' யாத்திரை பவானிசாகர் பகுதியில் நடைபெற உள்ளது அதில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.

9000 பேர் வரை தற்போது வரை இஸ்ரலில் இருந்து இந்தியா வர பதிவு செய்துள்ளனர். முன்னுரிமை அடிப்படையில், வயதானவர்கள், நோயாளிகள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து சூழ்நிலையை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லியோ திரைப்பட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தின் பட்டத்து இளவரசர்களின் சினிமா கம்பெனிகள் மட்டுமே சினிமாவை எடுக்க வேண்டும், அவர்கள் படங்கள் மட்டுமே சினிமாவில் திரையிட வேண்டும் என்கிற தவறான எண்ணத்தோடு செயல்பட்டு வருகின்றனர். மக்களும் மற்ற சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுடைய வாழ்க்கையை, குறிப்பாக சினிமா துறையை முடக்குவதற்கும், சினிமா துறையை ஒரு குடும்பத்தின் கீழ் வைப்பதற்குமான முயற்சியாக இதை பார்க்கிறேன்.

நீலகிரி மாவட்டத்தில் பாஜக போட்டியிடுகிறதா? அல்லது பாஜக கூட்டணி போட்டியிடுகிறதா? என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும். ஆ.ராசா அவர்கள் யுபிஏ ஆட்சியின்போது தனியார் நிறுவனத்திற்கு தடையில்லா சான்று கொடுத்ததன் மூலம் வாங்கப்பட்ட பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்கத்துறை என்பது சுதந்திரமான தனிப்பட்ட அமைப்பாகும். மக்கள் பணி செய்ய வேண்டியவர் சொத்துக்களை பினாமியின் பெயரில் வாங்கி தமிழக மக்களின் பணத்தை சுரண்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர் மட்டுமல்ல இப்போது திமுகவின் அமைச்சர் சிறையில் உள்ளார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஆயிரம் கோடிக்கான வரி ஏய்ப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மக்களுக்காக பணி செய்யாமல் அவர்கள் சார்ந்த நிறுவனங்களை வளப்படுத்துவதற்காக வேலை செய்துள்ளனர்.

மற்ற நாட்டுக்குள் நமது மீனவர்கள்  போகாமல் இருப்பதற்கு அறிவுரைகள் கொடுக்கிறோம். மீனவர்கள் ஆழ் கடலில் போய் மீன் பிடிப்பதற்காக ஒரு கோடி 30 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்கடல் படகுக்கு மானியம் தருகிறோம். ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கிறோம். மீன் வளத்தை பெருக்குவதற்காக, மீன் குஞ்சுகளை பெருக்குவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு ஏராளமான ஆலோசனைகள் கொடுத்து வருகிறோம். உலகிலேயே 4வது இடத்தில் மீன் ஏற்றுமதியில் இந்தியா உள்ளது. அக்வா கல்ச்சர் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருக்கிறோம். இப்படி தலைசிறந்து விளங்கும் இந்த துறையின் மூலம், மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கவும், நாட்டினுடைய எல்லை தாண்டி போவதை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

'என் மண், என் மக்கள்' யாத்திரை தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரை போகும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளத்தை பார்க்க முடிகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவினுடைய வாக்கு சதவீதம் 25 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்பது எங்களுடைய கணிப்பு என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe