பி.எஸ்.ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்து கொடூரம்...

published 1 year ago

பி.எஸ்.ஜி கல்லூரியில் ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டை அடித்து கொடூரம்...

கோவை: கோவை பீளமேடு பி.எஸ்.ஜி கர்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை தாக்கி மொட்டை அடித்து ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் ஏழு பேரை பீளமேடு  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது.  கல்லூரியில் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது  மாணவர் தங்கி இருந்த ஹாஸ்டல் அறை எண் 225க்கு   சென்றுள்ளனர். 

தொடர்ந்து அந்த மாணவரை மாணவரை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்ற சீனியர்  மாணவர்கள் அவரை ஆபாசமாக திட்டி தாக்கியதுடன், மொட்டை அடித்து, உதைத்தும், துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று காலை 5.30 மணி வரை  அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். 

மாணவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டதுடன், மது குடிக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 18 வயது மாணவர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்து திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர் மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். 

தொடர்ந்து இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும், கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்றும் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று நேற்று புகார் அளித்தனர்.  

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து, தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தரணிதரன், வெங்கடேஷ் ஆகியோரையும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாதவன், மணி ஆகியோரையும், நான்காம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ், யாலிஷ் ஆகியோர் என 7 பேரை பீளமேடு காவல்துறையினர் கைது செய்தனர். 

அவர்கள் மீது ராக்கிங் தடுப்புச் சட்டம் உட்பட, சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

கல்லூரிகளில் ராக்கிங் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், கோவையின் பிரபல கல்லூரியில் ராக்கிங் விவகாரத்தால் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe