கோவையில் வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்த போலீசார்- இருவருக்கு கால் முறிவு…

published 1 year ago

கோவையில் வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்த போலீசார்- இருவருக்கு கால் முறிவு…

கோவை: கோவையில் வழிப்பறி கும்பலை சுற்றி வளைத்த போலீசாரிடம் இருந்து
தப்பிக்க முயன்ற 2 வாலிபர்களுக்கு கால் முறிந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

கோவை பீளமேடு சின்னியம்பாளையம் பகுதியில் பைக்கில் சென்ற பாஸ்கர் (24) என்பவரிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து ஒரு கும்பல் பணம், தங்க மோதிரம், செல்போன் பறித்தது. அதே கும்பல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் டாக்கி டிரைவர் பிரசாந்த் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் அகில் ஆகியோரை வழிமறித்து பைக், ரூ.5 ஆயிரம் பறித்தனர்.
கோவையில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற வழிப்பறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறி கும்பலை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 6 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மேற்கண்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சோமசுந்தரம் (20), வினு (19), சிவா (22), தயா (23), மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த இவரது கூட்டாளிகள் ஜெகத்ஹரி(20), சேரன் (21) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
 

இந்நிலையில் அவர்கள் சின்னியம்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசின் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி ஓடினர். அப்போது கீழே விழுந்து ஜெகத்ஹரிக்கு வலது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீசார் ஜெகத்ஹரி மற்றும் சேரனை கைது செய்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட சோமசுந்தரமும் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் போது கீழே விழுந்தில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று காலில் முறிவு ஏற்பட்ட இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe