கோவை- பொள்ளாச்சி புதிய ரயில் ; இனி திருச்செந்தூருக்கு சுலபமாக போகலாம்..!

published 1 year ago

கோவை- பொள்ளாச்சி புதிய ரயில் ; இனி திருச்செந்தூருக்கு சுலபமாக போகலாம்..!

கோவை: கோவை-பொள்ளாச்சி இடையே கூடுதலாக புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது

கோவையிலிருந்து திருச்செந்துாருக்குச் செல்வதற்கு, ரயில் இயக்க வேண்டு மென்ற கோரிக்கையை நேரடியாக ஏற்காமல், இணைப்பு ரயில் தருவதற்காக, மூன்று ரயில்களை ஒருங்கிணைத்து இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையிலிருந்து மன்னார்குடிக்கும், அங்கிருந்து இங்கும், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் இரு வழிகளில் இயக்கப்படுகிறது; அதேபோன்று, இங்கிருந்து நாகர்கோவிலுக்கு திருப்பூர்-ஈரோடு-கரூர்-திண்டுக்கல் வழித்தடத்தில் இரு வழிகளிலும், கோவை-பொள்ளாச்சி இடையே மற்றொரு ரயில் ஒன்றும், இரு வழிகளில் இயக்கப்பட்டு வந்தது.

இப்போது இந்த மூன்று ரயில்களையும் ஒருங்கிணைத்து இயக்கவிருப்பதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாலக்காட்டிலிருந்து திருச்செந்துார் செல்லும் ரயிலில், கோவையிலிருந்து பயணிகள் சென்று ஏறிக் கொள்ளும் வகையில், புதிதாக ஒரு இணைப்பு ரயில் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால், கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு கூடுதலாக ஒரு ரயில் சேவை (காலை 5:20 மணி) கிடைக்கவுள்ளது.

மன்னார்குடியிலிருந்து கோவைக்கு காலை 4:45 மணிக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் வருகிறது; அந்த ரயில், காலை 5:20க்கு கோவையிலிருந்து புறப்பட்டு, காலை 6:25க்கு பொள்ளாச்சி செல்லும். அங்கிருந்து 7:25க்குப் புறப்பட்டு, காலை 8:45 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில், இரவு 7:30 மணிக்கு கோவையில் கிளம்பி, திருப்பூர்-ஈரோடு-கரூர் வழியாக நாகர்கோவில் செல்கிறது.

அங்கிருந்து கிளம்பி வரும் ரயில், கோவைக்கு காலை 7:45 மணிக்கு வருகிறது. அந்த ரயில், மாலை 6:40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு இரவு 8:00 மணிக்கு பொள்ளாச்சி செல்கிறது. அங்கிருந்து இரவு 8:55 மணிக்கு கிளம்பி, இரவு 10:00 மணிக்கு கோவை வருகிறது. அந்த ரயில், இரவு 12:00 மணிக்கு மேல் கோவையிலிருந்து கிளம்பி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலாக, மன்னார்குடி செல்லும்.

திருச்செந்துாருக்கு இணைப்பு

கோவையிலிருந்து காலை 5:20 மணிக்கு செல்லும் ரயில், பொள்ளாச்சிக்கு 6:25க்குச் செல்கிறது. அதில் சென்றால், பொள்ளாச்சிக்கு 7:05க்கு வந்து 7:10க்குப் புறப்படும் பாலக்காடு- திருச்செந்துார் ரயிலில் ஏறி திருச்செந்துார் செல்லலாம். 
திரும்பும்போது, இந்த ரயில் பொள்ளாச்சிக்கு இரவு 8:00 மணிக்கு வருகிறது; அதில் வந்து, இரவு 8:55 மணிக்கு, பொள்ளாச்சியிலிருந்து புறப்படும் ரயிலில் ஏறி, இரவு 10:00 மணிக்கு கோவை வந்து விடலாம்.

இதே தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில், கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பராமரிப்பு, புதன் கிழமைக்குப் பதிலாக செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மாற்றம், எப்போதிலிருந்து நடைமுறைக்கு வருகிறது என்பது குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


சாதகங்கள்... பாதகங்கள்!
இந்த 3 ரயில்கள் ஒருங்கிணைப்பால், கோவை அல்லது மேட்டுப்பாளையத்திலிருந்து திருச்செந்துாருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை, கைகழுவப்பட்டுள்ளது.

தற்போது, கோவை-பொள்ளாச்சி இடையில் இயக்கப்படும் ரயிலின் பெட்டிகளை, மதுரை கோட்டத்துக்கு மாற்றம் செய்து, மதுரை, தேனி வழியாக, கோவை-போடி இடையே புதிய ரயில் இயக்க வேண்டுமென்ற கோரிக்கை இனி எடுபடாது.

அதற்குப் பதிலாகத்தான், செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை வைத்து, கோவை-பொள்ளாச்சி இடையே கூடுதலாக ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோன்று, தைப்பூசம், பொங்கல், தீபாவளி, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளுக்கு, கோவையிலிருந்து பழனி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட வாய்ப்பேயில்லை.

அதேநேரத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மக்கள், கோவையில் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களையும், பெங்களூரு செல்லும் ரயில்களைப் பிடிப்பதற்கு இந்த இணைப்பு ரயில் உதவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe