கோவை அரசு கலைக்கல்லூரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் கருத்தரங்கு

published 1 year ago

கோவை அரசு கலைக்கல்லூரி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் கருத்தரங்கு

கோவை: 'தூய எதிர்காலத்திற்கு பசுமை பணிகள் ' என்ற தலைப்பில் கோவை அரசு கலைக் கல்லூரியில் இலவச ஐ. ஏ.எஸ் பயிற்சி மையத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கலந்துகொண்டார். வளமான எதிர்காலத்திற்கு வனத்துறையில் காணப்படும் அரசுப் பணிகளை பற்றி சதிஷ் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

கருத்தரங்கில் பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கூறியதாவது:

இந்திய வனப்பணி ஒரு அகில இந்தியப் பணியாகும். அதாவது மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான பணியாகும். மத்திய பொதுப்பணி தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் மாநில அரசாங்கத்தில் பணியாற்றுவார்கள். மாநில அரசாங்கம் இந்திய வனப்பணி ஆட்களை  இடமாற்றம் செய்யும். ஆனால் இந்திய வனப்பணி அதிகாரிகளை தேவைபடின் பணி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது.

இந்திய வனப்பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற முடியாது. மற்ற மாநிலத்தில் தான் பணியாற்ற வேண்டும்.

கடின உழைப்பு இருந்தால் மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற முடியும். இந்திய வனப் பணி நமது திறமையை வெளிக்கொணர நல்வாய்ப்புகளை வழங்குகிறது. இந்திய வனப் பணி அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றிய பிறகு மத்திய அரசாங்கத்திற்கு மாற்றுப் பணியில் செல்லலாம். இயற்கை, காடுகள், காட்டுயிர் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்திய வனப்பணியைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


அரசு கலைக் கல்லூரியின் அரசியல் துறைத் தலைவரும் இலவச IAS தேர்வு பயிற்சியை வழங்கி வரும் முனைவர் கனகராஜ் கூறியதாவது:

அகில இந்திய பணிகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். கடந்த இருபது ஆண்டுகளில் IAS, IPS உள்ளிட்ட அகில இந்திய பணிகளில் தமிழகத்தின் பொற்காலம் என்று கூறலாம். அகில இந்திய பணிகளில்  மூன்று கட்டங்களில் தேர்வு நடத்தப்பட்டாலும் கடைசி கட்டமான நேர்காணல் மிக முக்கியமானது.

தமிழக மாணவ மாணவிகள் நேர்காணலில் சற்று தடுமாறும் நிலை காணப்படுகிறது. இப்பிரச்சனையை வெல்ல வேண்டும் என்றால் மாணவர்கள் தங்களது தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பயமின்றி, படபடப்பு இல்லாமல் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். தொலைக்காட்சி உரையாடல்கள், விவாதங்களை பார்க்க வேண்டும்.

தலைமைப்பண்புகளை வார்த்தெடுக்க வேண்டும். விருப்ப பாடங்களை நன்கு படிக்க வேண்டும். தேசிய அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச அரசியல் நிகழ்வுகள், அமைப்புகள், மாநாடுகள் , நாடுகள் இடையிலான போர்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கில் கணிதம், வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் துறைகளை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe