My V 3 Ads நிறுவனத்தில் முதலிடு செய்த உறுப்பினர்கள் கோவையில் கைது!

published 1 year ago

My V 3 Ads நிறுவனத்தில் முதலிடு செய்த உறுப்பினர்கள் கோவையில் கைது!

கோவை: கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் உள்ள மைவி 3 ஆட்ஸ் நிறுவனம் மீது மோசடி புகார்கள் குவிந்து வருகிறது. இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் மைவி3 ஆட்ஸ் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்தன்(51) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் சுமார் 65 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சக்தி ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

அப்போது சக்தி ஆனந்தன், எங்களது நிறுவனம் குறித்து சிலர் சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பி, அவதூறு ஏற்படுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். மேலும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கூடி கோஷம் எழுப்பினர்.

அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் 199 பேரை போலீசார் விடுவித்தனர். சக்தி ஆனந்தனை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட சக்தி ஆனந்தனை விடுவிக்கவேண்டும், வழக்கை திரும்ப பெற வேண்டும் என நிறுவன உறுப்பினர்கள் 5 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒன்று கூடி கோஷம் எழுப்பினர். இவர்கள் அதே நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளும் வகித்து வருகின்றனர்

போலீசார் எச்சரித்தும் கலைந்து செல்லாததால் இந்த நிறுவனத்தை சேர்ந்த உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி(56), காளம்பாளையத்தை சேர்ந்த கணேசன்(38), தொண்டாமுத்தூர் தென்னமநல்லூரை சேர்ந்த பிரவீன்(29), தொண்டாமுத்தூர் வண்டிக்காரனூரை சேர்ந்த அருள்மணி(46) மற்றும் தூத்துக்குடி தருவை குப்பத்தை சேர்ந்த சிவானந்த பெருமாள்(40) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கூட்டத்தை கூட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe