மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்! மாணவர்களுக்கு இலவச உதவி மையம்!

published 11 months ago

மக்கள் சேவையில் கோவை மருத்துவர்கள்! மாணவர்களுக்கு இலவச உதவி மையம்!

கோவை: டாக்டர் நெட் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் அரசு பள்ளிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள மெட்வின் மருத்துவமனை மற்றும் டாக்டர் நெட் இந்தியா என்ற அமைப்பின் தன்னார்வலர்கள் வாரந்தோறும் கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் 4 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வகுப்பில், மாணவ-மாணவிகளுக்கு உடல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், சமூக பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.

தங்கள் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை மாணவர்களே களையும் நுட்பங்களும் கற்றுத்தரப்பட்டு வருவதாகவும், இதனால் மாணவர்களின் சுய ஒழுக்கம் மேம்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிக்கின்றனர்.

இதுகுறித்து மெட்வின் மருத்துவமனை மருத்துவர் தனுஷ்யா சவுமியா கூறியதாவது:

வியாதிகளைக் குறைக்க வேண்டும் என்றால் விழிப்புணர்வு அவசியம் என்ற சாராம்சத்தின் அடிப்படையில் பள்ளி மாணவர்கள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

டாக்டர் நெட் அமைப்பின் தன்னார்வலர்கள் மற்றும் மெட்வின்  மருத்துவமனை சார்பில் இந்த நிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருப்பது, உடல் அளவிலான மாற்றங்கள்; அவற்றை சமாளிப்பது குறித்து மாணவிகளுக்கும், உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கும் எடுத்துரைக்கிறோம்.

இது தவிர சமூக காரணிகளால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக போதைப்பொருள் விழிப்புணர்வும் செய்து வருகிறோம். இதனை மாணவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர். வீட்டில் யாரேனும் தவறு செய்தாலும் அதனை சரி செய்ய வலியுறுத்துகின்றனர்.

மேலும், உணவுப்பொருட்கள் குறித்து எடுத்துரைத்து வருகிறோம். விளம்பரத்தில் வந்தாலே அது நல்ல உணவுப் பொருள் ஆகிவிடாது என்பதையும், அதில் சேர்க்கப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என்னென்ன? அதனை எப்படி கண்டறிவது என்பது குறித்தும் தெரியப்படுத்துகிறோம்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக 10 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது; தொடர்ந்து நடைபெறும்.

பள்ளி நேரத்தில் கேட்முடியாத கேள்விகள், சந்தேகங்களை மாணவ-மாணவிகள், மருத்துவர்களிடம் கேட்பதற்கும் மன ரீதியான கவுன்சிலிங்-கிற்காகவும் இலவச உதவி மையத்தை தொடங்கியுள்ளோம். தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை செயல்படும் இந்த உதவி மையத்தை மாணவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறார்கள்.

மெட்வின் மருத்துவமனை மட்டுமல்லாது கோவையில் உள்ள சில மருத்துவர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த முன்வந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் அதிக மாணவர்களை சென்றடைய திட்டமிட்டுள்ளோம்.

மருத்துவ முகாம் அமைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் மெட்வின் மருத்துவமனை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு தனுஷ்யா சவுமியா கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe