கோவையில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி சாவில் மர்மம்…

published 10 months ago

கோவையில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி சாவில் மர்மம்…

கோவை: கோவையில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி (33). இவர் மழலையர் பள்ளியில் ஆசிரியை. இவர் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். 9 வயதான மகள் கோகுல பிரியா பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். 

அங்கே சிறுமி கோகுல பிரியா சென்றுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் மற்ற சிறார்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
கோகுல பிரியாவை காணவில்லை. பெற்றோர் அங்கே சென்று தேடியபோது நிலமட்ட நீர் தொட்டியில் சிறுமி மயங்கி நிலையில் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

சிறுமி இறந்து கிடந்த நீர் தொட்டி திறந்த நிலையில் கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘சிறுமி வீட்டிற்கு வராத நிலையில் அவரின் செருப்புகளை வீட்டின் முன் போட்டு சென்றனர். சிறுமியை காணவில்லை என நாங்கள் தேடியபோது நீர் தொட்டியை பார்க்க அங்கே இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. சிறிய துவாரம் கொண்ட தொட்டியில் சிறுமி விழ வாய்ப்பில்லை. அங்கே என்ன நடந்தது, எப்படி அவர் இறந்தார்? என விசாரிக்க வேண்டும். இந்த இறப்பில் மர்மம் இருக்கிறது. 

இதை போலீசார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவிற்கு நடந்த விவரங்களை மூடி மறைக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe