மக்களுக்கு நான் அளிக்கும் உறுதி.. புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை: கோவையில் முழங்கிய ஸ்டாலின்!

published 8 months ago

மக்களுக்கு நான் அளிக்கும் உறுதி.. புதிய எம்.பி.க்களுக்கு அறிவுரை: கோவையில் முழங்கிய ஸ்டாலின்!

கோவை: பா.ஜ.க அரசை பாசிச பாதையில் செல்லாமல் தடுத்திடுங்கள். ஒற்றுமை, உணர்வு, கொள்கை திரத்துடன் செயல்படுங்கள் என்று கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கூட்டணிக்கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிய நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

கோவையில் கடந்த முறை தேர்தல் பரப்புரைப்புக்கு வந்த போது இருந்த கூட்டத்தை விட பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளது.

கடந்த முறை கோவையில் நான் மேற்கொண்ட பரப்புரை இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனது. 8 முறை தமிழகத்திற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, ஒரே ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து க்ளோஸ் செய்துவிட்டார் ராகுல். அவர் வழங்கிய இனிப்பு, எதிர்க்கட்சிகளின் கணிப்புக்களை பொய்யாக்கியது.

40ம் நமதே என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது; அதற்கு அடித்தளம் நீங்கள், மேடையில் அமர்ந்திருக்கும் தலைவர்களே அதற்கு ஆதாரம்.

ரத்தத்தை வேர்வையாக சிந்தி காலத்தை கடமைக்காக ஒப்படைத்து, உழைத்து திமுக உடன் பிறப்புகள் திசையை நோக்கி வணங்குகிறேன்.

40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பார்லிமென்ட் சென்று வடை சாப்பிடுவோம் என்று சில அதிமேதாவிகள் சொல்கின்றனர். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை  "Wait and see"

பா.ஜ.க.வால் தனித்து அரசு அமைக்க முடியாத நிலையை நாம் உருவாக்கியுள்ளோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை, அம்பேத்கர் கொடுத்த சட்டபுத்தகத்திற்கு முன் தலைகுணிய வைத்துள்ளோம்.

கருணாநிதி ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் இது தான் நமது 41வது வெற்றி.

கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. அந்த வெற்றியை அ.தி.மு.க மீதான அதிருப்தி என்றனர். இப்போது நமது வெற்றி மக்களுக்கு இருக்கும் திருப்தியில் கிடைத்த வெற்றி.

இதை யாரும் பேச மாட்டாரகள்; இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளை புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டினார்கள்.

வங்கிக்கணக்கை முடக்கினார்கள், டில்லி ஜார்க்கண்ட் முதல்வர்களை கைது செய்தார்கள்.

சிறுபான்மை சமூகத்தை தரக்குறைவாக பேசினார்கள். உத்தரபிரதேசம், ஒடிசாவில் தமிழர்களை தரக்குறைவாக பேசினார்கள்

இத்தனை செய்தும் 240 தொகுதிகளை தான் வென்றார்கள். இது மோடியின் வெற்றி அல்ல, மோடியின் தோல்வி. பீகார், ஆந்திர முதல்வர்கள் ஆதரவு கொடுக்காவிட்டால் ஏது மெஜாரிட்டி? அவர்களால் தான் மோடி பிரதமராகியுள்ளார்.

237 உறுப்பினர்கள் பார்லிமென்டில் பா.ஜ.க.வுக்கு எதிராக அமர்ந்திருக்கிறோம். இனிமேல் அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது.

கடந்த 5 ஆண்டுகளில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9,695 கேள்விகள் கேட்டுள்ளனர். 1,949 விவாதங்களில் பங்கேற்றுள்ளனர். 59 தனி நபர் மசோதாக்கள் கொண்டுவந்துள்ளனர்.

சமூக நீதிக்காக பார்லிமென்ட்டில் உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த முறை போட்டுக்கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எம்.பி.க்களுக்கும் எடுத்துக்காட்டாக நமது எம்.பி.க்கள்உரை அமைய வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம், சமூக நீதி, மதச்சார்பின்மையை  பன்முகத்தன்மையை காப்பாற்றும் வகையில் உங்கள் உரை இருக்க வேண்டும்.

மேடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களே நாங்களும், தமிழக மக்களும் உங்கள் தோள்கள் மீது வைத்துள்ள கடமைகளுக்காகவும், தமிழக உரிமைகளுக்காகவும் உரக்க பேசுங்கள்.

பா.ஜ.க அரசை பாசிச பாதையில் செல்லாமல் தடுத்திடுங்கள். ஒற்றுமை, உணர்வு, கொள்கை திரத்துடன் செயல்படுங்கள்; ஓட்டளித்த மக்களுக்கும், கட்சித்தலைமைக்கும் உண்மையாக செயல்பட்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். 

வாக்களித்த மக்களுக்கு நான் அளிக்கின்ற உறுதிமொழி என்னவென்றால், எங்களை நம்பி பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கை நிச்சயம் வீண் போகாது! உங்களுக்காக உழைப்பதுதான் எங்களுடைய கடமை! எங்களுடைய கடமையை நாள்தோறும் செய்வதுதான் நாங்கள் உங்களுக்கு செலுத்தும் நன்றி!

அந்த நன்றி உணர்வுடன் சொல்கிறேன், இனி தமிழ்நாட்டில் எப்போதும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் என்ற நிலைமையை உருவாக்குவோம்.
வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “200-க்கும் அதிகமான தொகுதிகளை நம்முடைய கூட்டணி கைப்பற்றியது” என்ற இலக்கை நோக்கிய நம்முடைய பயணத்தை இன்றிலிருந்து தொடங்குவோம்.

இந்திய அரசியல் அமைப்பை மாற்ற நினைக்கும் பா.ஜ.,வை தடுக்கும் அரணாக நமது 40 எம்.பி.,க்களும் இருப்பார்கள் என்ற உறுதியை மக்களுக்கு நான் அளிக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe