விவசாயியை காரில் கடத்திய பா.ஜ.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் கைது!

published 7 months ago

விவசாயியை காரில் கடத்திய பா.ஜ.க பிரமுகர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை: ரூ. 2.50 கோடி நிலம் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் விவசாயியை காரில் கடத்திய பாஜ பிரமுகர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அச்சையூரை சேர்ந்தவர் தரணீதரன்(31). விவசாயி. இவருக்கு தாராபுரம் பழனி ரோட்டில் 35 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் ஹரிபிரசாத்(34) என்பவருக்கு ரூ. 2.50 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டது.

முதற்கட்டமாக ஹரிபிரசாத் ரூ.8.25 லட்சத்தை கொடுத்தார். மீதமுள்ள பணம் தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில், நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தரணீதரனை, ஹரிபிரசாத் சம்பவத்தன்று கோவை வருமாறு அழைத்தார்.

இதனையடுத்து கோவை வந்த தரணீதரன் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் தங்கினார். அங்கு சென்ற ஹரிபிரசாத் உங்களது உறவினர்கள் மூலம் நிலம் வாங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் தரணீதரன் தங்கியுள்ள அறைக்கு வந்த போலீசார், கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி சோதனை செய்தனர். அங்கு அதுபோல் எதுவும் இல்லாததால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனை தொடர்ந்து தன்னை போலீசில் மாட்டி விட சதி நடப்பதை அறிந்த தரணீதரன் தாராபுரம் சென்று விட்டார். நிலம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தரணீதரன் கொடுக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் கடந்த 16ம் தேதி கோவைக்கு வருமாறு ஹரிபிரசாத் அழைத்துள்ளார்.

இதனையடுத்து அவர் காரில் கோவை வஉசி பார்க் அருகே வந்தார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் அவரது காரில் ஏறி அவரை மிரட்டி கடத்தி சென்றனர். பின்னர் தரணீதரனிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்து பாஸ்வேர்டு கேட்டு ரூ. 30 ஆயிரம் பணம் எடுத்தனர்.

தொடர்ந்து அவரது செல்போன் மற்றும் நில ஆவணங்களை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து தரணீதரன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் நிலம் தொடர்பான பிரச்னையில் ஹரிபிரசாத் தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ஹரிபிரசாத், கணபதி சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார்(37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கைதானவர்களில் ஹரிபிரசாத் தாராபுரம் முன்னாள் பாஜக மண்டல துணைத்தலைவராகவும், பாபு ரத்தினபுரி முன்னாள் பாஜக நெசவாளர் அணி மண்டல தலைவராகவும் இருந்துள்ளதும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மண்டல செயலாளராகவும் இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe