கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் பறிப்பு பைக்கில் வந்த 2 பேர் மீது வழக்கு!

published 6 days ago

கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் பறிப்பு பைக்கில் வந்த 2 பேர் மீது வழக்கு!

கோவை: கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.51 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அகாகே காதம் (28). தங்க நகை வியாபாரி. கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தங்க நகைகள் விற்பனை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு 50.95 லட்ச ரூபாயுடன் தனது வீட்டில் இருந்து சேலம் நோக்கி பைக்கில் புறப்பட்டார். தங்க நகைகள் வாங்கி விற்பனை செய்வதற்காக இவர் பணத்துடன் புறப்பட்டதாக தெரிகிறது.

இவர் அவினாசி ரோடு மேம்பாலத்தில் ஏறியபோது 2 பேர் அந்த வழியாக பைக்கில் வந்தனர்.
அவர்கள் அகாகே காதம் பைக்கை வழி மறித்து நிறுத்தினர். அப்போது அகாகே காதம், ‘‘யார் நீங்கள்?, ஏன் பைக்கை மறித்து நிறுத்துகிறீர்கள்?’’ என கேட்டார். 
அப்போது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர் அகாகே காதமின் சட்டையை பிடித்து இழுத்தார். இதனால் அகாகே காதம் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழ முயன்றார்.

அப்போது அவர் தோளில் மாட்டியிருந்த பணம் வைத்திருந்த பேக் பறிக்கப்பட்டது. பின்னர் அந்த 2 பேரும் பைக்கில் அங்கேயிருந்து வேகமாக தப்பிச்சென்றனர்.

அகாகே காதம் பைக்கில் சிறிது தூரம் விரட்டி சென்றும் அவர்களை மடக்கி பிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து தப்பி சென்ற 2 பேர் குறித்து விசாரித்தனர்.

மேம்பாலத்தின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதில் நகை பறித்த 2 பேர் தப்பிச்சென்ற காட்சி பதிவாகியிருந்தது. அந்த நபர்களில் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண படோல் என தெரியவந்தது.

இன்னொருவர் குறித்த விவரம் தெரியவில்லை.
இதையடுத்து கேமரா காட்சிகளை வைத்து அந்த 2 நபர்களும் எங்கே சென்றார்கள்? என தேடி வருகின்றனர்.

நகை வியாபாரியை நோட்டம் விட்டு அதிரடியாக இந்த பணம் பறிப்பு நடந்திருப்பதாக தெரிகிறது. அந்த 2 திருடர்களும் அகாகே காதமை வீட்டில் இருந்து பின் தொடர்ந்து வந்து பணத்தை பறித்து இருக்கலாம் எனவும், திருடர்கள் வெளி மாநிலத்திற்கு தப்பியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களை பிடிக்க தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணம் பறிப்பு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe