ஈஷா தமிழ்த் தெம்புவில் மார்ச் 7 முதல் மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்...

published 4 days ago

ஈஷா தமிழ்த் தெம்புவில் மார்ச் 7 முதல் மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்...

கோவை: ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் கொண்டாடப்பட்டு வரும், "ஈஷா தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" நிகழ்ச்சி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி இயற்கை விவசாயியும் தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலருமான வள்ளுவன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

சத்குரு வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு தமிழ்த் தெம்பு திருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா வரும் மார்ச் 9ம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நாட்டின மாடுகள், குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற்று வருகிறது. இதனுடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி சிலை முன்பு மார்ச் 7 முதல் 9ம் தேதி வரை நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்’ நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனுடன் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் வழங்கும் "நாயன்மார்கள் கதையாடல்" மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல், தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும்.

அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெறுகின்றன.

இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறுகின்றன.

தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

ரேக்ளா பந்தயம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe