கோவையில் இன்று ஊர்வலமாக வந்து 245 விநாயகர் சிலைகள் விசார்ஜன்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

published 2 years ago

கோவையில் இன்று ஊர்வலமாக வந்து 245 விநாயகர் சிலைகள் விசார்ஜன்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை: கோவை மாநகரில் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாநகரில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக 489 விநாயகர் சிலைகள் காவல்துறையின் அனுமதியுடன் கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும்  சிலைகள் வைத்ததிலிருந்து 3-வது, 4-வது மற்றும் 5-வது நாட்களில் இந்து அமைப்புகளும், பொதுமக்களும் சிலைகளைக் கோவையிலுள்ள குறிச்சிக் குளம், குனியமுத்தூர் குளம், முத்தண்ணன் குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய குளங்களில் விசார்ஜனம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு 3-வது நாளாகிய நேற்று முன்தினம்  கோவை மாநகரிலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக வைக்கப்பட்ட 222 விநாயகர் சிலைகள் குனியமுத்தூர் குளம், குறிச்சி குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் ஆகியவற்றில் கரைக்கப்பட்டன. இன்று 245 சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசார்ஜனம் செய்யப்பட்டது. 

விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் விசார்ஜனத்திற்காக கோவை மாநகர காவல் துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விநாயகர் சிலை ஊர்வலங்கள் ஆரம்பிக்கப்பட்ட  அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், ஒவ்வொரு ஆரம்ப இடத்திற்கும் தக்க பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று விநாயகர் சிலைகள் விசார்ஜன குளமான முத்தண்ணன் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடி பார்வையில் நடைபெற்றது. அதன்படி 11 உதவி ஆணையர்கள், 38 ஆய்வாளர்கள், 80 துணை-ஆய்வாளர்கள், 137  காவல் துறையினர், 65 ஆயுதப்படை வீரர்கள், 250 ஊர்க்காவல் படையினர், மற்றும் ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் 2 பேர் என்ற வீதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இதுபோக 4 தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணிகள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆர்.ஏ.எப். கம்பெனிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விநாயகர் சிலைகளைக் கரைப்போர் ஆர்வத்தில் குளங்களில் நீச்சல் தெரியாமல் இறங்கி அதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் பொருட்டு, தக்க உபகரணங்களுடன் கோவை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த 35 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் குளங்களின் அருகே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக விநாயகர் சிலைகள் விசார்ஜனம் செய்யப்படும் குளங்களுக்கு செல்லும் ஊர்வலப்பாதைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாற்றுவழிப் பாதைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் உற்சாகத்துடன் நடைபெற்றது. விநாயகர் சிலை ஊர்வலமானது, கோவை மாநகர போலீசாரால் டிரோன் காமிரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe