கோவையில் அதிகரிக்கும் ஐ.டி நிறுவனங்கள்..! என்ன காரணம்? என்ன பயன்? - முழு விவரம்

published 2 years ago

கோவையில் அதிகரிக்கும் ஐ.டி நிறுவனங்கள்..! என்ன காரணம்? என்ன பயன்? - முழு விவரம்

கோவை: கோவையில் கடந்த ஓராண்டில் 40க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது கோவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.

கோவை மாவட்டமானது விவசாயம் மட்டுமல்லாது, உற்பத்தி தொழிற்சாலைகள்  நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் பம்புகள், கிரைண்டர்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தொழில் தலைநகராக விளங்கி வரும் கோவை தற்போது தொழில் நுட்ப நகராகவும் உருவெடுத்து வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கோவை மாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் கால்பதிக்கத் துவங்கியிருப்பதாக கூறுகின்றனர் துறை வல்லுநர்கள். இதன் மூலமாகக் கோவை இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை பெறுவார்கள். வேலை வாய்ப்பு மட்டுமல்லாது, கோவையின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கும் இத்தகைய நிறுவனங்கள் உதவும் என்கின்றனர் துறை வல்லுநர்கள்.

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டுத்துறை ஆலோசகர் கிஷோர் கூறியதாவது:

இயற்கை சீற்றங்கள், வாழ்வதற்கான செலவு, சுற்றுச்சூழல், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அடிப்படையாக கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கோவையில் நிறுவி வருகின்றனர். இது கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இதனால் தங்கள்  நிறுவனத்திற்கு ஏற்ற பணியாளர்கள் துரிதமாக கிடைப்பார்கள் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. கோவையை மையமாகக் கொண்டு இத்தகைய நிறுவனங்கள் அமையும் போது கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள்.

இவ்வாறு கிஷோர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe