கோவையில் ரூ.26 கோடி மதிப்பில் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு 112 சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி முடிவு

published 2 years ago

கோவையில் ரூ.26 கோடி மதிப்பில் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு 112 சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி முடிவு

கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தும் வகையில், குண்டும், குழியுமாகக் காணப்படும் சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  

கோவை மாநகரில்  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன.  மாநகரில் ஏறத்தாழ 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சி சாலைகள், 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன.  மாநகரில் பாதாளச் சாக்கடைப் பணிக்காகவும், குடிநீர் குழாய் பதிக்கவும், கேபிள், தொலைப்பேசி, இணையதள வயர்கள் பதிக்கவும், பாதாளச் சாக்கடை குழாய் வீட்டு இணைப்பு வழங்கவும், 24 மணி நேரக் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் பதிக்கவும் சாலைகள் அடிக்கடி தோண்டப்படுகின்றன. முயல் வேகத்தில் சாலைகள் தோண்டப்பட்டாலும், அந்த சாலைகள் சீரமைப்பு  பணி ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன.  

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, "தற்போதைய சூழலில் மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள், பொதுமக்கள் சிரமப்பட்டுச் செல்லும் வகையில் மேடு, பள்ளங்களாகவும், குண்டும், குழியுமாகவும் காணப்படுகின்றன. இந்தக் குழிகளைக் கடந்து வாகன ஓட்டுநர்கள் வளைந்து, நெளிந்து, சர்க்கஸ் வித்தைகளைப் பயன்படுத்தித் தான் செல்ல வேண்டியுள்ளது. சில இடங்களில் காணப்படும் குழிகளை முறையாகத் தார் ஊற்றி சீரமைக்காமல், தற்காலிகமாக மண், ஜல்லிக்கற்களைப் போட்டுச் சீரமைக்கின்றனர். அந்த இடத்தில் மழையின் போது சேறும் சகதியுமாகவும், மற்ற நேரங்களில் புழுதி பறந்தும் காணப்படுகிறது.

மாநகரில் ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலான இடங்களிலுள்ள ஒவ்வொரு வீதியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 5 இடங்களில் குழிகள் காணப்படுகின்றன. பீளமேடு, ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், பழையூர், ரத்தினபுரி, லட்சுமி புரம் சாலை, உக்கடம் - செல்வபுரம் சாலை சந்திப்பு, புட்டுவிக்கி சாலை, தெலுங்குபாளையம், ஹோப்காலேஜ், மசக்காளிபாளையம், சவுரிபாளையம், சிங்காநல்லூர், துடியலூர், சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் ‘பேட்ஜ் வொர்க்’ நடவடிக்கைகளையாவது மேற்கொள்ள வேண்டும்." என்றனர்.

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, "கோவை மாநகரில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளைச் சீரமைக்க அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி  38 கிலோ மீட்டர் தூரத்துக்கு 112 எண்ணிக்கையிலான சாலைகளில் புதியதாகத் தார்த்தளம் அமைக்கப்பட உள்ளன.   சாலைகளைச் சீரமைக்க மேலும் ரூ.50 கோடியை அரசிடம் கேட்டுள்ளோம். அதுவும் கிடைக்க வாய்ப்புள்ளது." என்றார்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe