பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது ஏன்?- ஓய்வு பெற்ற அதிகாரி விளக்கம்

published 2 years ago

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது ஏன்?- ஓய்வு பெற்ற அதிகாரி விளக்கம்

 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற பி. ஏ. பி. கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன் கூறியதாவது:- 
"பரம்பிக்குளம் அணையின் மதகிற்கு மேல் உள்ள கான்கிரீட் பிளாக் சேதமடைந்ததால், இரும்பு மதகு சேதம் அடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதாகக் கேரள ஊடகங்கள் கூறி வருகின்றன. கடந்த ஓராண்டாக வெள்ள மேலாண்மை பணிகளைக் கண்காணிக்கச் சுழற்சி முறையில் பொறியாளர்கள் பணிபுரிந்ததால், மதகு உடைப்பு உடனடியாக தெரிந்தது. கண்காணிப்பிலிருந்தபோது தெரிந்ததால் தகவல் உடனே தெரிவிக்கப்பட்டது. கேரளாவிற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் நடப்பாண்டில் நமக்குப் பயன்பட இருந்த 6 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வெளியேறுவது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்று. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை மதகு உடைந்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பு முக்கொம்பு கதவணை பாதிக்கப்பட்டது. தற்போது பரம்பிக்குளம் அணையின் மதகு சேதம் அடைந்து உள்ளது. இயற்கையின் பாதிப்புகள் எனக் கூறினாலும், வேறு சில துறை ரீதியான காரணங்களும் இருக்கிறது என நான் கருதுகிறேன்.‌

அணைகளின் மதகுகளை இயக்கவும், பராமரிக்கவும் பாசன உதவியாளர்கள் இருப்பார்கள். பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. புதிதாக ஆட்களை எடுத்தாலும் முறையான பயிற்சி இல்லை. கோவை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளின் மதகுகள் மற்றும் மணற்போக்கி கதவுகளில் ஏற்படும் சிறிய, சிறிய பழுதுகள், ரப்பர்சீலிங் கிரீஸ் மற்றும் சில பெரிய பழுதுகளையும் பார்க்க அரசுத்துறையின் பணிமனை ஆழியாற்றில் இருந்தது.

அங்குப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அவ்வப்போது பழுதுகளை மேற்கொள்வார்கள். ஆழியார் பணிமனையைச் சீரமைக்க வேண்டும் என ரூ.90 லட்சத்தில் மதிப்பீடு தயார் செய்து அனுப்பினோம்.‌ அது தேவையில்லை என உயர் மட்டத்தில் முடிவு எடுத்தனர். இதனால் எந்த பழுதானாலும் ஒப்பந்ததாரரை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய ஒப்பந்தம் இல்லாமல் அவர்கள் பணி செய்ய மாட்டார்கள். அவசரம் என அழைத்தால் உடனடியாக வந்து சரிசெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குள் பழுது அதிகமாகிவிடும்.

எனவே, 10 முதல் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாற்றில் இருந்த பணிமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஐ. டி. ஐ படித்த இளைஞர்களை பணிமனையில் எடுத்து, 6 மாத பயிற்சி கொடுத்து தயார் செய்ய வேண்டும்.

அணைகளின் பாதுகாப்பிற்கு உலக வங்கித் திட்டம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோது, அணைகளில் உள்ள பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், முறையான பயிற்சியும், தமிழில் வழிகாட்டும் கையேடுகளையும் தர வேண்டும் என வலியுறுத்தினேன். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மலைகளில் உள்ள அணைகளைப் பராமரிக்க போதிய உதவிப் பொறியாளர்கள், அவர்களுக்கான பாசன உதவியாளர்களை நியமிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பாசன பணியாளர்கள் பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும்.

அவர்களுக்குப் பயிற்சி அவசியம். இதுபோன்ற அடிப்படையிலான பல முக்கிய அம்சங்களைச் செய்யாததால், தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை வைத்து கேரளா அணைகளை எங்களுக்குத் தாருங்கள் எனச் சாதகமாகப் பேசக்கூடும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலத்திற்கு நீர் வரும். இந்த மண்டலத்து விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைக்காது. ஒரு இடத்தில் மதகுகள் உடையும் போதே அனைத்தையும் சீரமைக்க வேண்டும். உடைந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சரியான மேலாண்மையினால் மாற்ற முடியும்."
இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பான நமது நேற்றைய செய்தியை இங்கே படிக்கலாம்: https://newsclouds.in/news/1168/Parambikulam_dam_shutter_damaged:_TN_government_starts_repair_work

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe